மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

வீடுகளில் சூரிய மின் உற்பத்தி : நீதிமன்றம் யோசனை!

வீடுகளில் சூரிய மின் உற்பத்தி : நீதிமன்றம் யோசனை!வெற்றிநடை போடும் தமிழகம்

சூரிய மின் உற்பத்தியையும் காற்றாலை மின் உற்பத்தியையும் ஏன் ஊக்குவிக்கக் கூடாது என பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தாதது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதை நேற்று (செப்டம்பர் 27) விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் மின் பற்றாக்குறை உள்ளதா? நிலக்கரி பற்றாக்குறை உள்ளதா?

அதிக விலை கொடுத்து அண்டை மாநிலங்களில் மின்சாரம் வாங்குவதற்காக காற்றாலை மின் உற்பத்தியை அரசு பயன்படுத்துவது இல்லை எனக் கூறுவது உண்மையா என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழ்நாடு மின்சார துறை செயலாளர் நஸிமுதீன் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் விக்ரம் கபூர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்படி அவர்கள் இருவரும் இன்று (செப்டம்பர் 28) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின்போது, கர்நாடகாவில் அனைத்து வீடுகளிலும் சூரிய மின் உற்பத்திக் கருவிகள் பொருத்தப்படுவதைப் போல, தமிழகத்திலும் பொருத்த வேண்டும் என வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருபாகரன், தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் வகையில் வீடுகளில் சூரிய மின் உற்பத்திக் கருவிகளை பொருத்துவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்றும் சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை ஏன் ஊக்குவிக்கக் கூடாது என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

இதுசம்பந்தமாக அக்டோபர் 25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், ஏற்கனவே எழுப்பிய கேள்விகளில் சிலவற்றுக்கு தமிழக அரசு அளித்த பதில் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.

மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்தார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon