மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

மோடிக்கு பவார் ஆதரவு: கட்சியிலிருந்து விலகிய பொதுச் செயலாளர்!

மோடிக்கு பவார் ஆதரவு: கட்சியிலிருந்து விலகிய பொதுச் செயலாளர்!

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக சரத் பவார் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் ரஃபேல் முறைகேடு விவகாரம் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி, பிரதமர் மீதும் மத்திய அரசின் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகிறது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், பிரதமர் மோடியை ஆதரிக்கும் விதமாக கருத்து கூறியிருக்கிறார். ‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டு மக்களுக்கு சந்தேகம் எழவில்லை. இந்த ஒப்பந்தம் தொடர்பான, தொழில்நுட்பரீதியான தகவல்களை வெளியிடக் கோருவதும் சரியல்ல’ என்று மராத்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இதனை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் வரவேற்றிருந்தார்.

இந்த நிலையில் சரத்பவாரின் பேச்சைக் கண்டித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான தாரிக் அன்வர், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 28) பிகார் மாநிலம் காதிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய தாரிக் அன்வர், “ரஃபேல் பேர விவகாரத்தில் பிரதமர் மோடியை சந்தேகப்பட முடியாது என்ற சரத்பவாரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜகவுக்கு உதவ முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மீது கடந்த காலங்களில் மற்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக பொது கருத்து நிலவுகிறது. பாஜக அரசு தனது வர்த்தக நண்பர்களுக்கு உதவ முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில் நான் தேசியவாத காங்கிரஸ் கருத்தோடு உடன்படவில்லை. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன். மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon