அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, முருகன் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில், தீர்ப்பு குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளந்திரையன்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக ஆடியோ உரையாடல் வெளியான புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, இந்த வழக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்தனர். இவை தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி நிர்மலா தேவி மற்றும் முருகன் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று (செப்டம்பர் 28) நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்றது.
முருகன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், “இந்த வழக்கில் பல்கலைக்கழக மகளிர் மேம்பாட்டுத் துறை தலைவர் மற்றும் புத்தாக்கப் பயிற்சி இயக்குனர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை வைத்து முடிக்க சிபிசிஐடி நினைப்பதாகவும், இதில் பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்க நிர்மலா தேவியும் முருகனும் தயாராக இருப்பதாக, அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி இளந்திரையன்.