மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சபரிமலை: பெண்கள் மீது பாவம் சேருமா?

சபரிமலை: பெண்கள் மீது பாவம் சேருமா?

30 ஆண்டு போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிதான் சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு என்கிறார் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான ஜீவ சுந்தரி. கோயிலுக்குச் செல்வதில் பால் பேதம் வேண்டாம் என்று கருதும் பலரது கருத்தைப் பிரதிபலிப்பதாகவே இது அமைந்துள்ளது.

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கி, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதியன்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, சபரிமலைக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த கட்டுப்பாடு மிகக் கடினமான முறையில் விதிக்கப்பட்டிருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால், 1949ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைந்தபோது, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களைச் சபரிமலைக்குள் அனுமதிக்கக்கூடாது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிரபல கன்னட நடிகை ஜெயமாலா, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்றதாகக் கூறி, இதுபற்றிய சர்ச்சைத் திரியை மீண்டும் பொதுவெளியில் தூண்டிவிட்டார். இதைத் தொடர்ந்து, ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த சில பெண்கள், ஆண் வேடமிட்டுச் சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளனர். இதையடுத்து, பெண்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, 1991ஆம் ஆண்டே கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உடல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ காரணம் காட்டி, வழிபாட்டில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டக் கூடாது என்றும், அவர்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் நேற்று (செப்டம்பர் 28) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்குச் சாத்தியம்? சபரிமலைக்குப் பெண்கள் செல்ல, இனி ஏற்பாடுகள் செய்யப்படுமா? இந்த தீர்ப்பைச் சாமானியப் பெண்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படும் எழுத்தாளர், பத்திரிகையாளர் மத்தியில், இந்த தீர்ப்பு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காண்போம்.

“இந்த தீர்ப்பு பெண்களுக்கு அளவில்லாத சந்தோஷத்தை அளித்துள்ளது. இது ஒரு முக்கியமான தீர்ப்பு” என்கிறார் எழுத்தாளர் ஜீவ சுந்தரி. “இந்த மாதிரியான தீர்ப்புகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கும். காலங்காலமாக ஓடுக்கப்பட்ட பிரிவில் இருந்த பெண்கள் வாழ்க்கையில் ஒரு அடி முன்னேறியிருப்பதாகப் பார்க்கிறேன். எந்த மதமாக இருந்தாலும், பெண்களுக்குப் பின்னடைவைத் தான் கொண்டு வந்திருக்கிறது” என்கிறார் இவர்.

“இன்றைய பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. இதெல்லாம், காலத்தின் மாற்றம் என்றே கூறலாம். பெண்களின் சிந்தனை செய்யும் சக்தி மாறியிருக்கிறது. தன் உடல் சார்ந்து ஏற்படுகிற ஒரு நிகழ்வினால், பெண்ணுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இப்போதைய பெண்கள் அனைவரும் மாதவிடாயைச் சந்தோஷமாகவும், அடுத்த தலைமுறையை உருவாக்குகிற ஒன்றாகவும் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதனை வெளிப்படையாகவும் கூற ஆரம்பித்துவிட்டனர். அதனால், அவர்களைக் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பெண்களைப் போன்றே பார்க்கக் கூடாது” என்று கூறுகிறார் ஜீவ சுந்தரி.

கோயிலுக்குள் அனுமதிக்கமாட்டார்கள் என்பது மட்டுமில்லாமல், அங்கு செல்பவர்கள் கூட பெண்களைப் பார்க்க மாட்டார்கள் என்பது மிகவும் கொடுமையான விஷயம். கடந்த காலத்தில் இந்த அனுபவம் பல பெண்களுக்கு நேர்ந்துள்ளது. “இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, சபரிமலைக்கு மாலை போட்டிருந்த ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையில் ஒரு இடம் இருந்தது. அங்கே போய் உட்கார்ந்தேன். அப்போது அவர் முகம் சுழித்ததைப் பார்த்து எழுந்துவிட்டேன். ஆண் ஒருவர் வந்தபோது, அவர் உட்காருவதற்கு அனுமதி அளித்தார்” என்கிறார் பத்திரிகையாளர் சுமித்ரா.

“மதம் சார்ந்த கோட்பாடுகள், வேதங்கள், கட்டுப்பாடுகள் போன்றவைகளை உருவாக்கியது ஆண்கள்தான். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையே ஆண்கள்தான் நிர்ணயிக்கின்றனர். பெண்களுடைய விருப்பத்துக்கு என்றைக்காகவது முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறதா? திருமணத்தில் கூட உரிமை கிடையாது. உரிமை பறிபோகின்ற நிலையைத்தான் நாம் ஆணவக் கொலைகளாக பார்க்கின்றோம். நகரங்களின் ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் பெண்களுக்கு உரிமை கிடைக்கிறது” என்கிறார் ஜீவ சுந்தரி.

“என்னுடைய கணவர் 17 முறை சபரிமலைக்குச் சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவரை அனுப்பும்போது, நாமும் என்றைக்கு ஒருநாளாவது அங்கு போவமோ என்ற ஏக்கமும் என் மனதில் இல்லாத நாட்களே கிடையாது. 18வது முறையாக என்னுடைய கணவருடன் சபரிமலைக்குச் செல்வேன் என்ற சந்தோஷம்தான் இப்போதைக்கு என் மனதில் இருக்கிறது” என்று ஆர்ப்பரிப்புடன் சொல்கிறார் சுமித்ரா.

இவரைப் போனறே ஆனந்தம் கொண்டுள்ளார் இல்லத்தரசி பரிமளா. “இத்தனை நாட்களாக நம்மாலும் அந்த சபரிமலை ஐயப்பனைப் பார்க்க முடியுமா என்ற ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம்” என்கிறார் இவர். “நாங்கள் இருவரும் அனைத்து கோயிலுக்கும் தவறாமல் சென்று தரிசனம் செய்து வருவோம். ஆனால் இங்குதான் ஒன்றாகச் செல்ல முடியாத நிலை இருந்தது. அந்த தடையும் இப்போது நீங்கிவிட்டது” என்கிறார் பரிமளா.

இவ்வாறு பெண்கள் சந்தோஷப்படும் அதே சமயத்தில், இந்த தீர்ப்பினால் பெண்களுக்குத் தான் பாவம் என்று கூறுகிறார் உமாவாணி. “கடவுள் உரைக்க மனிதனால் இயற்றப்பட்ட புனித நூல்களை முன்வைத்து, ஆண்டவன் விருப்பம் என்று காலம்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் மனிதனால் இடப்பட்டது என்று கூறி, கடவுளைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து தீர்ப்பு சொன்ன புனித நாள் இது” என்று உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் உமாவாணி.

விஞ்ஞான ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்ணுக்கு சில சிரமங்கள் இருப்பது இயற்கையே என்கிறார். “விஸ்வாமித்திரனின் தவமே, ஒரு பெண்ணால் கலைந்து விட முடியுமானால், சாதாரண மனிதரின் நிலைமை என்ன?” என்று சொல்லும் இவர், “குடும்பம், சுற்றத்தார் அனைவருக்காகவும் தலையில் இருமுடி சுமந்து ஐயப்பனைத் தரிசிப்பார்கள். பெண்களே நீங்களும் செல்வதால், உங்களால் அவர்களின் மனம் கலைந்து விரதம் தடைபடாதா? நீங்களும் பாவத்திற்கு உள்ளாவீர்கள்” என்கிறார் உமாவாணி.

ஒவ்வொருவரின் பார்வையும் மாறுபடும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ஜீவ சுந்தரி. “மத நம்பிக்கையில் ஏன் தலையிடுறீங்க என்று கூறிய நீதிபதி இந்து மல்ஹோத்ரா தான் முத்தாலக்கிற்கு தடை விதித்தார். அவர், தன்னுடைய மதத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். மாதவிடாயினால் பெண்களால் 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்று சிலர் கூறலாம். ஆனால், ஆண்களே 48 நாட்கள் விரதம் இருப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியுமா? உடல் ரீதியான மாற்றம் ஒரு குறைபாடு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதை மட்டுமே முன்னிறுத்தி அவர்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று சட்டம் கூறுகிறது” என்கிறார் ஜூவ சுந்தரி.

“ஏதோ ஒரு காரணத்துக்காக பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுதான் இவ்வளவு நாட்களாக பெண்களும் இருந்தனர்” என்கிறார் சமூக ஆர்வலர் லதா.

“அனைத்து மதங்களிலும் பெண்ணடிமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அவர்களே ஏற்றுக் கொள்கிறபோது, ஏன் தலையிட வேண்டும். ஒரு மதத்திற்கென்று பல்வேறு கோட்பாடுகள், வரைமுறைகள் பல இருக்கின்றன. அதை அந்த மதத்தைச் சார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டு செல்லும்போது, அதில் எதற்கு நீதிமன்றம் தலையிட வேண்டும்” என கேள்வி எழுப்புகிறார் சமூக ஆர்வலர் லதா.

“பெண்களுக்கு அனுமதி வழங்கபட்டதற்கு பெண்கள் சந்தோஷம் அடைகின்றனர் என்பது ஒருபக்கம். இந்த தீர்ப்பை விரதமிருக்கும் ஆண்களும் வரவேற்கின்றனர். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சபரிமலைக்குப் போவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இனிமே சபரிமலைக்கு சென்றால் கிளுகிளுப்புதான் என்று 60 வயதான ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதில், யார் மீது தவறு இருக்கிறது” என்று கேள்வி எழுப்புகிறார் ஜீவ சுந்தரி.

இப்படிப் பலரும் பலவித கருத்துகளை முன்னிறுத்தினாலும், சபரிமலைக்குச் செல்வது என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை. அவர்கள்தான் இதில் முடிவெடுக்க வேண்டும். குடும்பத்தோடு சபரிமலைக்குச் சென்று வருவது சந்தோஷமான தருணம்தான். இந்த விஷயத்தில், இனி பெண்கள் மட்டுமே சுயமாகத் தங்களது முடிவைத் தீர்மானிக்க வேண்டும்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon