மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கல்லூரிகள் தோறும் ரஃபேல்!

கல்லூரிகள் தோறும் ரஃபேல்!

உச்ச நீதிமன்றத்தின் சபரிமலைத் தீர்ப்பு, முறையற்ற உறவு வழக்குத் தீர்ப்பு ஆகியவை ஒரு பக்கம் ஊடகங்களில் கவன ஈர்ப்பினைப் பெற்று வந்தாலும், ரஃபேல் போர் விமான பேர சர்ச்சை இவற்றை எல்லாம் தாண்டி இன்னும் மக்களிடையே பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் ஊழல் விவகாரம் குறித்து மாணவர் காங்கிரஸ் தீவிரப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தமிழகத்திலேயே முதன்முறையாக தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் இன்று (செப்டம்பர் 29) ரஃபேல் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ரஃபேல் ஊழல் குறித்து கல்லூரி மாணவர்களுக்கும், அவர்கள் மூலம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தனர்.

மாணவர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் மாரிகுமார், மாணவர் காங்கிரஸ் கோவை மாவட்டத் தலைவர் உதயகுமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.எம்.சி. மனோகரன், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், திருச்சி ஜி.கே. முரளிதரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாணவர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் மாரிகுமாரிடம் பேசினோம்.

“மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் ரஃபேல் போர் விமான பேர ஊழல். இதுகுறித்து எங்கள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினால், மோடிக்கு எதிரான சர்வதேச சதி என்று நாடகம் ஆடுகிறது பாஜக.

ரஃபேல் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை அம்பானியிடம் கொடுத்ததில் நடந்திருக்கும் ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான ஊழல் பற்றி மாணவர் காங்கிரஸ்தான் தீவிரமாக கையிலெடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். அதாவது ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்கும் மாணவர் காங்கிரஸ் சார்பாக அக்கலூரி மாணவர்கள் அனைவருக்கும் ரஃபேல் ஊழல் தொடர்பான புள்ளிவிவரங்களை துண்டுப் பிரசுரங்களாக அளிக்கும்படியும் ராகுல் உத்தரவிட்டிருக்கிறார்.

அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கியிருக்கிறோம். கோவையில் நடந்த ஆர்பாட்டத்தில் கற்பகம் கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி, என்.ஜி.டி. , பிஷப் அப்பாசாமி அரசு கலைகல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

இதைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் என தமிழகம் முழுதும் ரஃபேல் ஊழலை ஒவ்வொரு கல்லூரி தோறும் கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று ரஃபேல் ஊழல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கிறோம். இதை மாணவர்கள் எல்லாம் தங்கள் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களுக்கும் கொடுக்கச் சொல்லிக் கேட்கிறோம். இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ரஃபேல் ஊழல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மூலம் ஏற்படுத்துவோம்” என்றார் நம்பிக்கையாய் மாரிக்குமார்.

-ஆரா

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon