மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

தீவிர சிகிச்சையில் திருமுருகன் காந்தி

தீவிர சிகிச்சையில் திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஐஎம்சியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் முற்போக்கு சிந்தனையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஐ.நா சபையில் பதிவு செய்து விட்டு நாடு திரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை, கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பெங்களூருவில் வைத்து கைது செய்தது காவல் துறை. ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர் மீது நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்த காவல் துறை அவரை சிறையில் அடைத்தது.

கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களாக சிறையில் இருந்து வரும் திருமுருகன் காந்தி, கடந்த 23ஆம் தேதி சிறையில் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் அருகே உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றனர். திருமுருகன் காந்திக்கு அங்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு வயிற்று வலி, வாயு பிரச்சனை, மூச்சுத் திணறல், அல்சர் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிந்ததும் திருமுருகன் காந்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தியை ஆஜர்ப்படுத்த காவல் துறையினர் அழைத்து வந்த நிலையில், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் வைகோ. பின்னர் செய்தியாளர்களிடம், “சிறையில் வெந்நீர் வைத்துக்கொள்ள கூட திருமுருகன் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்றும் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் திருமுருகன் காந்தி இன்று (செப்டம்பர் 29) காலை மீண்டும் சிறையில் மயங்கி விழுந்ததையடுத்து, அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஎம்சியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. திருமுருகன் காந்தி அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீனிடம் பேசினோம், “திருமுருகன் காந்திக்கு குடல் புண் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் இதுவரை சிறையில் பத்துக்கு மேற்பட்ட முறை மயங்கி விழுந்திருக்கிறார். அவருக்கு சிறையில் அளிக்கப்படும் உணவில் சோடியம் குளோரைடு அதிக அளவில் கலக்கப்படுகிறது. இந்த அமிலங்கள் ஜீரண சக்தியை குறைக்கும் தன்மை கொண்டவையாகும்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon