மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி-பன்னீர் விளம்பர யுத்தம்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி-பன்னீர் விளம்பர யுத்தம்!

மொபைல் டேட்டா ஆனில் இருக்க.. வாட்ஸ் அப்பில் மெசேஜ் டைப்பிங் ஆனது.

“நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் நடக்கிறது. கிரீன்வேஸ் சாலை முழுக்கவே ப்ளக்ஸ்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் முகத்தை விட, எடப்பாடி முகமே ப்ளக்ஸ்களில் அதிகமாக தெரிகிறது. அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவில் பக்கம் பக்கமாக அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு சார்பில் அனைத்து நாளிதழ்களிலும் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் படங்கள் மட்டுமே இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் பெயர் இருந்தாலும், படம் மிஸ்ஸிங்.

தமிழக அரசு விளம்பரத்தில் முதலில் பன்னீர் படமும் இருந்திருக்கிறது. நேற்று காலை, அந்த விளம்பரத்தை முதல்வரிடம் காட்டியபோது, அதில் சில திருத்தங்களை செய்திருக்கிறார். அப்போதுதான், துணை முதல்வர் படமும் அதில் தேவை இல்லை என ‘இன்ட் மார்க்’ போட்டு அதை எடுக்கச் சொன்னாராம். ‘நிர்வாகிகள் கொடுக்கிற விளம்பரத்துல அவரோட படம் இருந்துட்டு போகட்டும். அதுல எதுவும் நாம தலையிடப் போறது இல்லை. இது அரசாங்கத்தின் சார்பில் கொடுக்கிற விளம்பரம். அதுல துணை முதல்வர் படம் வேண்டாம்...’ என அதிகாரிகளிடம் சொன்னாராம்.

அதற்கு, ‘ சார்... இதற்கு முன்பு நாம அவரோட படம் போட்டு விளம்பரம் கொடுத்திருக்கோம்’ என செய்தி விளம்பரத் துறை அதிகாரி ஒருவர் சொல்ல... ‘இதுக்கு முன்னாடி செஞ்சதெல்லாம் இனியும் செய்யணும்னு எந்த அவசியமும் இல்லை. இது விழாவுக்கு முதல் நாள் வரக் கூடிய விளம்பரம். இதுல அந்தப் படம் தேவை இல்லை. நாளைக்கு ஒருவேளை முழுப்பக்க விளம்பரம் வரும் போது தேவைப்பட்டால் வெச்சுக்கலாம். அதுகூட என் அனுமதி இல்லாமல் வைக்க வேண்டாம்...’ என சொல்லிவிட்டாராம்.

இந்த விளம்பரம் இன்று பத்திரிகையில் வரும் வரையில் பன்னீர் பார்க்கவில்லையாம். காலையில் விளம்பரத்தில் தனது படம் இல்லாததைப் பார்த்து கொந்தளித்துவிட்டாராம் பன்னீர். கோட்டையில் இருக்கும் விளம்பரப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு போன் போட்டு, ‘ காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. படம் போடுறதுல கூட அரசியல் பண்ணணுமா?’ என காய்ச்சி எடுத்திருக்கிறார். அந்த அதிகாரியோ, ஏதேதோ காரணங்களை சொல்ல... ‘ யாரு சொல்லி நீங்க படம் போடலைன்னு எனக்கு தெரியும். நீங்க அதிகாரிகளாக மட்டும் நடந்துக்கோங்க. கட்சிக்காரங்களாக மாற வேண்டாம்...’ என்று சத்தம் போட்டுவிட்டுதான் போனை வைத்திருக்கிறார். இந்த தகவலும் உடனடியாக எடப்பாடி கவனத்துக்குப் போயிருக்கிறது. ‘அவரு சத்தம் போடாமல் இருந்தால்தானே ஆச்சர்யம்... பார்த்துக்கலாம் விடுங்க...’ என சொன்னாராம் எடப்பாடி.

அதேபோல அமைச்சர்களுக்கு முதல்வர் தரப்பில் இருந்து சில அறிவுரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ‘இதுவரை நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பலரும் பல காரணங்களால் வராமல் இருந்திருக்கீங்க. இது சென்னையில் நடக்கும் விழா. அதனால் எல்லா அமைச்சர்களும் கட்டாயம் இருக்க வேண்டும். விழாவுக்கு வாழ்த்து விளம்பரத்தை நம்ம பத்திரிகையில் மட்டும் கொடுத்தால் போதும். மற்ற பேப்பர்களுக்கு அரசு சார்பில் கொடுக்கும் விளம்பரமே போதும். நீங்க யாரும் தனியாக கொடுக்க தேவை இல்லை. ’ என்று முதல்வர் சார்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அமைச்சர்கள் பலரும் பல்வேறு பத்திரிகைகளிலும் ஓ.பன்னீர் படத்தையும் போட்டு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் ” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் பாரதிராஜா, பாக்யராஜ், நாஞ்சில் அன்பழகன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். கமிட்டி மெம்பர்களுக்கு மேடையில் ஷீல்டு கொடுக்கலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால், ‘அது வேண்டாம்’ என எடப்பாடி சொல்லிவிட்டாராம். விழாவுக்கும் கூட, பெயரளவில்தான் கமிட்டி மெம்பர்களுக்கு அழைப்பு போயிருக்கிறது. அதனால் விழாவுக்கு போகணுமா என தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார் பாரதிராஜா. அதேபோல பாக்யராஜும் கொஞ்சம் வருத்தத்தில்தான் இருக்கிறாராம்” என்று ஸ்டேட்டஸ் முடிய... சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

சனி, 29 செப் 2018

அடுத்ததுchevronRight icon