மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது!

நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது!

தமிழக அரசு சார்பில் சென்னையில் நாளை (செப்டம்பர் 30) நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவுக்கான அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமமுக துணைப் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று (செப்டம்பர் 28) வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக பங்கேற்காது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு முறை நடைபெறும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் பெயர் போடுகின்றனர். கடந்த முறை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது, எதிர்க்கட்சித் தலைவரை நான்காவது வரிசையில் அமரவைத்தார்கள். 89 பேர் கொண்ட சட்டமன்ற கட்சியின் தலைவரை அவர்கள் நடத்திய விதம் சரியாக இல்லை. இவ்வாறு விழாவில் கலந்துகொண்டு வருத்தம் ஏற்படும் வகையிலான ஒரு நிலையைச் சந்திக்க எங்களுக்கு விருப்பம் இல்லை.

வழக்கமாக ஒரு மாவட்டத்தில் விழா நடக்கிறதென்றால் அந்த மாவட்டத்தினுடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை போடுவார்கள். அப்படித்தான் எங்கள் பெயரையும் போட்டிருக்கிறார்களே தவிர அரசோ, அமைச்சர்களோ அவரை அழைத்து நீங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என சொல்லி இருந்தால் ஒரு வேளை கலந்துகொண்டிருப்பார். அழைப்பிதழில் பெயர் இருக்கிறது என்பதைத் தாண்டி முறையான அழைப்பு இல்லை எனவே அதில் பலனில்லை என்று கருதுகிறோம் என கூறியுள்ளார்.

முன்னதாக டிடிவி தினகரன் தானும் இவ்விழாவில் கலந்துகொள்ள் போவதில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon