மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

வரலாற்றைத் திருப்பிய இந்தியா!

வரலாற்றைத் திருப்பிய இந்தியா!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது.

‌இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 நாடுகள் மோதிய ஆசியக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று (செப்டம்பர் 28) இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா சேஸிங்கைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய வங்கதேசம் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 121 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், சவுமியா சர்கார் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினர். இந்தியப் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

‌தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்து தவன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு 2 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் நிலையான பாட்னர்ஷிப்பை அமைக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைப் போல இந்தப் போட்டியும் கடைசி ஓவர்வரை சென்றது. கடைசிக் கட்டம் வரை த்ரில்லாகச் சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் லெக் பை-மூலம் 1 ரன் எடுத்தே இந்தியா வெற்றி பெற்றது.

‌இதன் மூலம் நடப்பு சம்பியனான இந்தியா மீண்டும் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இந்தியா, கடந்த முறை ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தியே பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon