மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

இந்தோனேஷியாவில் சுனாமி!

இந்தோனேஷியாவில் சுனாமி!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தைத் தொடர்ந்து, பலூ நகரை சுனாமி தாக்கியது.

இந்தோனேஷியாவிலுள்ள சுலவாசி தீவின் மத்தியப் பகுதியில் நேற்று (செப்டம்பர் 28) பூகம்பம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வமைப்பின் கணக்கீட்டின் படி, இந்த பூகம்பம் 7.5 ரிக்டர் அளவு கொண்டது என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்தோனேஷிய பேரிடர் அமைப்பானது சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சுலவாசியின் மேற்கு கடற்கரைப் பகுதி மற்றும் இந்தோனேஷியாவின் போர்னியோ தீவை உள்ளடக்கிய கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை சுனாமி தாக்கும் என்று எச்சரித்தது.

இந்த நிலநடுக்கத்தினால் சுலவாசி தீவிலுள்ள கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. பாதிப்புக்குள்ளான கட்டடங்களில் இருந்து விலகியிருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். டோங்கலா பகுதியில் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பூகம்பத்தைத் தொடர்ந்து, சுலுவாசி தீவிலுள்ள பலூ நகரை நேற்று சுனாமி தாக்கியது. இந்தோனேஷியப் பேரிடர் அமைப்பின் தலைவர் ரஹ்மத் டிரையானோ இதனை உறுதி செய்துள்ளார். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால், அந்நகரிலுள்ள மக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊரைவிட்டு வெளியேறத் தொடங்கினர். இதனால், அங்கு மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை அமைப்பினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த பூகம்பத்தின்போது, லம்போக் தீவில் 500 பேர் பலியாகினர். கடந்த 2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுனாமி உண்டானது. இதனால், இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சேர்ந்த 13 நாடுகளில் 2 லட்சத்து 26ஆயிரம் பலியாகினர். இந்தோனேஷியாவில் மட்டும் ஒரு லட்சத்து 20ஆயிரம் பேர் மரணமடைந்தனர். இந்தியாவின் தென்மாநிலங்கள் இந்த சுனாமியால் மிகப்பெரிய அளவில் இழப்பைச் சந்தித்தன.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon