மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

மூச்சுத் திணறும் நிதி நிர்வாகம்: ஸ்டாலின்

மூச்சுத் திணறும் நிதி நிர்வாகம்: ஸ்டாலின்

தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை மட்டும் 3.55 லட்சம் கோடி என்று குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ஒட்டுமொத்த மாநில நிதி நிர்வாகம் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 23-24ஆகிய தேதிகளில் சென்னையில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வர்த்தகர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே “இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், குஜராத்திலிருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்குக் கிடைக்கும்” என்று தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதனைக் குறிப்பிட்டு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழகம் வந்து முதலீடு தேடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் எல்லாம் அண்டை மாநிலங்களை நோக்கி அ.தி.மு.க அரசின் கமிஷன் கலாச்சாரத்தால் ஓடுகிறார்கள். அப்படியொரு அவல நிலைமை நீடித்து நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கின்ற நேரத்தில், தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவிப்பு ஆச்சரியமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“முதல் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கானல் நீராகவே, எதற்கும் பயன்படாமல் இருக்கின்றன. சட்டமன்றத்தில் கூட கேள்வி எழுப்பியும், அதற்கு முதலமைச்சரிடமிருந்தோ, தொழில்துறை அமைச்சரிடமிருந்தோ எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான பதில் இதுவரை இல்லை” என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், பெறப்பட்ட முதலீடுகள் குறித்து - அவை உள்ளபடியே பெறப்பட்டிருந்தால், சரியான தரவுகளுடன் ஒரு வெள்ளையறிக்கை வெளியிடக்கூட இந்த அரசுக்குத் தன்னம்பிக்கை இல்லை. 2011 முதல் 2015 வரை முன்மொழியப்பட்ட, 1 கோடியே 55 லட்சத்து 807 ரூபாய் முதலீடுகளில், வெறும் 5620 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டிருக்கிறது என்று வெளிவந்த புள்ளி விவரம், அ.தி.மு.க அரசின் நிர்வாகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது என்றும் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், தமிழ்நாடு மிகவும் மோசமாகப் பின் தங்கியுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை விட, அதிக வேலைவாய்ப்பின்மையால் தமிழகத்தில் உள்ளோர்தான் தவித்துக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், “ 2018-19 தமிழக நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் வருவாய்ப் பற்றாக்குறை 17,491 கோடி. தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை மட்டும் 3.55 லட்சம் கோடி. அ.தி.மு.க அரசின் மிகமோசமான நிதி நிர்வாகத்தால் இன்றைக்கு மாநிலம் நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, மூன்றரை லட்சம் கோடிக்கு மேல் கடன் என்று ஒட்டுமொத்த “மாநில நிதி நிர்வாகம்” மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“அமைச்சர்களும் அதிகாரிகளும் கடும் நிதிப் பற்றாக்குறையிலும் உலகம் பூராவும், நாடு முழுவதும் “முதலீடுகளை ஈர்க்கிறோம்” என்று சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள். ஊழல் நிர்வாகம், ஊழல் அமைச்சர்கள், ஊழல் முதலமைச்சர் என்ற மூன்று முக்கிய (?) “முதலீடுகளை” மட்டும் வைத்துக்கொண்டு, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடுகளை எப்படிப் பெறப் போகிறார்கள் என்பது இமயம் போன்ற பிரம்மாண்டமான கேள்வியாக எழுந்து நிற்கிறது. இந்த வேளையில்தான் குஜராத்திலிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டு வரப் போகிறோம் என்று கூறியிருக்கிறார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி “தேர்தல் விளம்பரத்திற்காக” முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கு முன்பு, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட 2.42 லட்சம் கோடி முதலீடுகளும் பெறப்பட்டு விட்டனவா என்பது பற்றி விளக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon