மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

விமானக் கட்டணம் உயருமா?

விமானக் கட்டணம் உயருமா?

விமான எரிபொருளுக்கு 5 சதவிகித கலால் வரி விதிப்பதால் விமானக் கட்டணங்கள் உயர்ந்துவிடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் 19 அத்தியாவசியமில்லா பொருட்களின் வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் விமான எரிபொருளுக்கான கலால் வரியும் உயர்த்தப்படுகிறது. இந்த நடவடிக்கையால் விமானக் கட்டணங்களும் உயரும் என்று விமான நிறுவனங்கள் தரப்பில் அஞ்சப்பட்டது. விமான கட்டணங்கள் உயர்த்தப்படும் போது விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் விமான எரிபொருளுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டால் விமானக் கட்டணங்கள் உயர்ந்துவிடாது என்று மத்திய நிதித் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் எவையெல்லாம் அத்தியாவசியமானவை மற்றும் எவையெல்லாம் அத்தியாவசியமில்லாதவை என்று நாங்கள் பட்டியலிடும்போதே, அப்பொருட்கள் இந்தியாவில் போதுமான அளவுக்குக் கிடைக்கின்றனவா என்பதையும் பார்த்தோம். அதன் அடிப்படையிலேயே 19 பொருட்களுக்கான கலால் வரியை உயர்த்த முடிவு செய்தோம். விமான எரிபொருளைப் பொறுத்தவரையில் அது போதுமான அளவில் உள்நாட்டிலேயே கிடைக்கிறது. 2017ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.30,000 கோடி மதிப்பிலான விமான எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ரூ.1,100 கோடி மதிப்பிலான விமான எரிபொருள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே 5 சதவிகித கலால் வரி விதித்தால் அதில் ரூ.55 கோடி மட்டுமே கூடுதலாகச் செலவாகும்” என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon