மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: ‘தவறான’ உறவுக்கு அனுமதி அளிக்கிறதா நீதிமன்றம்?

சிறப்புக் கட்டுரை: ‘தவறான’ உறவுக்கு அனுமதி அளிக்கிறதா நீதிமன்றம்?

ஆஸிஃபா

நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றம் சமீபகாலத்தில், மிக முக்கியமான சட்டங்கள் சம்பந்தமான தீர்ப்புகளை வெளியிட்டுவருகிறது. அதிலும், மாற்றுப் பாலினத்தவர்கள் சம்பந்தமான சட்டப் பிரிவு 377, சட்டப் பிரிவு 497, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஆகியவற்றில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை இந்திய வரலாற்றில் முக்கியமான தீர்ப்புகளாக நான் நினைக்கிறேன்.

மண உறவுக்கு வெளியில் கொள்ளும் உடலுறவு குறித்த சட்டப் பிரிவு 497 தொடர்பான வழக்கின் தீர்ப்பு பெரும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. தீர்ப்பு வந்ததிலிருந்து எல்லோருக்கும் ஒரே குழப்பமாகவே இருக்கிறது. குடும்பங்கள் உடையும் என்று ஒருபுறம், பெண்கள் இனி கட்டுப்பாட்டுக்குள் இருக்க மாட்டார்கள் என்று ஒருபுறம், தமிழ்க் கலாச்சாரம் அழிவதற்கான மேல்நாட்டுச் சதி என்று ஒருபுறம், என அனைத்தையும் குழப்பிக்கொண்டு, எதற்காக இச்சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள் என்ற உண்மையான காரணம் தெரியாமல் இருக்கிறார்கள் பலர்.

‘கள்ளக் காத’லுக்கு அனுமதியா?

இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்விகளுள் ஒன்று, “கள்ளக் காதலுக்கு அனுமதி அளித்திருக்கிறதா உச்ச நீதிமன்றம்?”. ‘கள்ளக் காதல்’ என்ற சொல்லே தவறானது. எமவே, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள், குறிப்பாக உடலுறவு, சரி என்கிறதா உச்ச நீதிமன்றம் என்பதே பலரின் கேள்வி. “இனி யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் போகலாம்” எனும் வசனத்தைத்தான் நான் நேற்றில் இருந்து கேட்டுவருகிறேன். இது உண்மையா?

அதற்குப் பதில் தெரிவதற்கு முன்பு, இச்சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 497இன்படி, கணவரின் சம்மதமின்றித் திருமணமான ஒரு பெண்ணுடன், வேறொரு ஆண் உடலுறவு கொள்வது குற்றம். அந்த ஆண் குற்றம் புரிந்தவராகப் பார்க்கப்படுகிறார். இவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கொடுக்கலாம். அபராதமும் போடலாம். இரண்டையும் ஒருங்கே தண்டனையாக வழங்கலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இச்சட்டம் பெண்ணைத் தண்டிக்கவில்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது “கணவரின் சம்மதமின்றி” என்ற சொற்றொடரைத்தான். இதனால் நம் சட்டம் சொன்னது இதைத்தான்: “பெண் ஆணின் உடைமை; அவள் ஆணைத் திருமணம் செய்வதன் மூலம், அவளுடைய பாலியல் தேவைகள், தேர்வுகள் உட்பட அனைத்தையும் கணவனிடம் ஒப்படைக்கிறாள்; இதைத் தாண்டி அவள் ஓர் உறவில் ஈடுபட்டால், கணவனின் உடமையான அவளை வேறொரு ஆண் அபகரித்துவிட்டான், எனவே அவன் தண்டனைக்குரியவன்.” இவ்வளவுதான்.

இதுகுறித்து நீதிபதி இந்து மல்ஹோத்ரா, “இந்தச் சட்டம் 1860களில் இயற்றப்பட்டது. அக்காலத்தில், மனைவி என்பவள் தன் கணவனுடைய நிழலில் வாழ்ந்தாள். உறவுகளில் இத்தகைய பாலினப் பாகுபாடுகளை அனுமதிப்பதும், ஒடுக்குமுறைகளை ஆதரிப்பதும், இந்திய அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளின் தெளிவான அத்துமீறலாகும்” என்று தெரிவித்திருக்கிறார். “சட்டப் பிரிவு 497 அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி இச்சட்டத்தை நீக்கியிருக்கிறார்கள்.

இந்த சட்டத்தைத் தெரிந்துகொண்ட பின், எழ வேண்டிய நியாயமான கேள்வி ஒன்று இருக்கிறது. அது, “கணவனின் அனுமதி இருந்தால், அவ்வுறவு குற்றமில்லையா?” என்பதுதான். ஆம், குற்றமில்லை. கணவனின் அனுமதியுடன் வேறொரு ஆணுடன் உறவுகொண்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதைக் குற்றமாகக் கருதவில்லை. இன்னொன்றையும் இச்சட்டம் குற்றமாகக் கருதவில்லை, அது: திருமணமான ஆண், திருமணமாகாத ஒரு பெண்ணுடன் உறவுகொள்வதை.

பொதுவாக, குற்றவியல் குற்றங்கள் சம்பந்தமாக யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடர முடியும். ஆனால், திருமணம் சார்ந்த விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்குத் தொடர முடியும் என்பதே சட்டம். இச்சட்டத்தைப் பொறுத்தவரை, பாதிக்கப்படவர் மட்டுமே வழக்குப் போடலாம்; பாதிக்கப்படுவது கணவர் மட்டும்தான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், மனைவி இவ்வழக்கைப் போடவே முடியாது. தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பதைக் குறித்து ஒரு பெண்ணால் வழக்குத் தொடர முடியாது; ஆனால், அப்பெண்ணின் அதாவது உறவில் இருக்கும் பெண்ணின் கணவன், இவன் மீது வழக்குப் போட முடியும். மேலும், கணவன் தன் மனைவி மீது வழக்குப் பதிய முடியாது. ஆணுக்கும் ஆணுக்குமான வழக்காகவே இது காலம்காலமாகவே இருந்துவருகிறது. பெண்ணை இக்குற்றத்தின் கீழ் தண்டிக்கவே முடியாது. சட்டத்தின்படி, ஆண்தான் உடல் சார்ந்த உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவன். அதனால், அவனே பாதிக்கப்பட்டவனும், தண்டனைக்குரியவனும் ஆகிறான். பெண் என்பவளுக்கு சிறிதளவுகூட சுயாதிகாரம் இல்லாத சட்டமாக இது இருந்துவந்தது. இதை இப்போது மாற்றியிருக்கிறார்கள். இதைத்தான் தீர்ப்பில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்: “பெண் கணவனின் உடைமை அல்ல.”

தீர்ப்பு என்ன சொல்கிறது?

சரி, இப்போதைய தீர்ப்பு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம், யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள்ளுங்கள் என்று நம் உச்ச நீதிமன்றம் சொல்லவே இல்லை. இருவர் சம்பந்தப்பட்ட அந்தரங்கமான விஷயத்தை, சமூகப் பிரச்சினையாகக் கருதிக் குற்றவியல் குற்றமாகப் பார்க்காமல், சிவில் வழக்காகவே பார்க்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து, விவாகரத்து போன்ற தீர்வுகளை நோக்கிச் செல்லலாம்.

ஆக, ஒட்டுமொத்தமாகக் கூற வேண்டுமானால், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு சமூகப் பிரச்சினை அல்ல; தனிநபர்களுக்கு இடையேயான பிரச்சினை; அது குற்றம் அல்ல.

இன்னும் ஒரு விஷயத்தை மட்டும் பார்த்துவிட்டால், நமக்கான புரிதல் தெளிவாகும் என்று நம்புகிறேன். அது, இவ்வழக்கில், நீதிபதிகளின் வார்த்தைகள். நான் இதைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் இருக்கிறது. இச்செய்தி பல இடங்களில் திரித்துக் கூறப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. எனவே சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

“திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது கணவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு போல மட்டும் அணுகப்படுகிறது. அவனின் சொத்து திருடு போனதற்காகத் திருடியவனைத் தண்டிக்க ஒரு செயல்பாடாகத் திகழ்கிறது” - நீதிபதி இந்து மல்கோத்ரா.

“மகிழ்ச்சியற்ற திருமணங்களால் விளைவதே திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளே தவிர, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள்தான் மகிழ்ச்சியற்ற திருமணங்களுக்குக் காரணம் என்று சொல்ல முடியாது. இச்சட்டத்தின் படி ஒருவரைத் தண்டிப்பது, மகிழ்ச்சியற்ற திருமணத்தில் வாழும் ஒருவரை தண்டிப்பது போலாகும்.” - தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

“தனிப்பட்ட கௌரவத்தையும் பெண்களின் சமத்துவத்தையும் பாதிக்கும் எந்தவொரு சட்டமும், அரசியலமைப்பின் வெறுப்பிற்குட்பட்டதாகும். கணவன் மனைவியின் எஜமானன் அல்ல என்று சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது.” - தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர்.

மனுதாரர் முன் வைக்கப்பட்ட வாதம், “திருமணத்தின் புனிதத்தன்மையை இச்சட்டப் பிரிவு பாதுகாக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால், ஒரு ஆண் திருமணமாகாத பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமில்லை என்ற பட்சத்திலும், திருமணத்தின் புனிதத்தன்மையைப் பாதிக்கும்தானே? புனிதத்தன்மை என்பதைப் பெண்ணிடம் எதிர்பார்க்கும் நீங்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கவில்லையா?”

இதில் என்ன சீரழிவு?

இதில் ஏன் பலருக்கும் கோபம் வருகிறது? இதில் எங்கே கலாச்சாரச் சீரழிவு நடக்கிறது? சொல்லப் போனால், இப்போதுதான் நம் கலாச்சாரம் மீட்டெடுக்கப்படுகிறது. அனைவருக்குமான சம உரிமைகள் இப்போதுதான் மேலெழும்புகின்றன. திருமணத்திற்குள் நடக்கும் வன்புணர்வுகளும் குற்றம் எனச் சொல்லும் சட்டமும் விரைவில் வர வேண்டும். காலம்காலமாக, ஒரு பெண்ணை, அவளுடைய ‘கற்பை’ வைத்தே மிரட்டிவருகிறது நம் சமூகம். இதைத் தகர்த்தெறியும் சட்டங்களும், வாழ்க்கைமுறையும் விரைவில் வர வேண்டும்.

திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஓர் உறவு; அதில் குடும்பங்களுக்கும், குடும்பங்களின் குடும்பத்தவருக்கும், தெருவில் வாழ்பவர்களுக்கும், சமூகத்திற்கும் தொடர்பே கிடையாது. அன்பும் அறமும் மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டிய இல்லற வாழ்வில் பல முடிச்சுகளைப் போட்டுக் குழப்பியிருக்கிறது நம் சமூகம். இந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் வேளை வந்து பல காலமாகிறது. நம்மால் முடிச்சுகள் அவிழ்வதைப் பார்க்க முடியவில்லை. அடுத்தவரின் படுக்கையறையினுள் எட்டிப் பார்ப்பது நம் சமூகத்தின் பொதுவான வியாதியாக மாறியிருக்கிறது. பிக் பாஸ் முதல் வளர்ந்து வரும் பாலுறவுப் படத் தொழில்வரை அனைத்தும் இதற்கு சாட்சியாக நிற்கின்றன.

மாற்றுப் பாலினத்தவர் விஷயத்திலும் சரி, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளிலும் சரி, நம் கண்ணை உறுத்துவது, அவர் யாருடன் படுக்கிறார் என்பதுதான். இது நம் முன்னேற்றத்திற்குத் துளிக்கூட உதவாத விஷயம். எனவே அவரவர் அவரவர் வேலையைப் பார்த்தாலே போதும்; அனைத்தும் சரியாக நடக்கும்.

கலாச்சாரம் என்பது, வேளாண்மை தோன்றிய நாள் முதல் இன்று வரை மாற்றத்திற்குட்பட்டு வருகிறது. எனவே, கலாச்சாரம் வளரவும் செய்யாது, சீரழியவும் செய்யது. கலாச்சாரம் மாறிக்கொண்டே வரும். ஒரு கலாச்சார முறையில் இருந்து மற்றொரு கலாச்சாரத்தை நோக்கிய நகர்வுதான் வளர்ச்சி. எனவே, அதிகமாகத் தானும் குழம்பி, பிறரையும் குழப்பாமல், தகவல்களை முழுதாகத் தெரிந்துகொண்டு பேசுவது உத்தமம்.

இறுதியாக, “திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் குற்றம் கிடையாது என்பதன் மூலம், அவ்வுறவுகள் சரியென்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை” என்கிறார் நீதிபதி சந்திராசத். எனவே, நீங்கள் மீம்கள் போடுவதுபோல, எல்லோரும் “அவ புருஷன்தான் வேணும்” என்றெல்லாம் கேட்கப்போவது கிடையாது. பெண்கள், தங்களுடைய விருப்பு வெறுப்புகளைப் பொறுத்துத் தங்கள் வாழ்வைத் தீர்மானிக்க முடியும்; எந்த ஒரு புள்ளியிலும் அதை மாற்றியமைக்கவும் முடியும், என்பதை நோக்கித்தான் நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

ஒரு அடிதான் எடுத்து வைத்திருக்கிறோம். இனி அனைத்தும் சீராகும்!

(கட்டுரையில் இடம்பெற்றுள்ள படங்கள் மண உறவுக்கு வெளியேயான உறவைக் கையாண்ட இந்தியத் திரைப்படங்கள் சிலவற்றின் காட்சிகள் - ஆசிரியர்)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon