மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

கட்டுக்கு அடங்காத பூதங்கள்!

வளர்ந்துவரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா தலைமையேற்று நடத்தத் தயார் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐநா பொதுசபையில் கூறியுள்ளார். இதே ஐநா பொதுசபையில் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சுற்றுச்சூழலுக்கான ‘சாம்பியன் ஆப் எர்த்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற பிரதமருக்கு நமது வாழ்த்துகள்! ஆனால், இந்தியாவில் அரங்கேறிவரும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இந்த விருது இந்தியப் பிரதமருக்குத் தகுதியானதா எனும் கேள்வியை எழுப்புகின்றன.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளாக சிலவற்றை சுஷ்மா ஐநா மன்றத்தில் பட்டியலிட்டுள்ளார்.

1) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகளவில் இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது.

2) சூரிய ஒளியில் மின்சாரம் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா 5ஆவது இடத்தில் இருக்கிறது.

3) 2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட்ஸ் சூரிய மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

4) 30 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி பல்புகளை இந்தியா நிறுவியுள்ளது.

அவ்வளவுதான்! சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி உலக அரங்கில் முன்வைத்த ஆகச் சிறந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் அவ்வளவுதான்!

இன்னொரு விஷயத்தையும் அவர் கூறி நமக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

“வானம், காற்று, நீர், பூமி, நெருப்பு அக்கிய பஞ்ச பூதங்களிலிருந்துதான் இந்திய கலாச்சாரம் உருவானது. இந்தியாவில் இவற்றுக்குள் நல்லிணக்கம் நிலவுகிறது” என்றார்.

ஆனால், நடைமுறை நிலவரங்கள் பஞ்ச பூதங்களும் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருப்பதையே காட்டுகின்றன.

உலகில் அதிகமான காற்று மாசு உள்ள நகரங்களில் முன்னிலை வகிப்பது டெல்லிதான். ஆன்லைனில் அதிகமான ஏர் ப்யூரிஃபையர்கள் வாங்கிக் குவிக்கும் நகரம் இந்தியத் தலைநகரம்தான்!

உலகிலேயே மிக மோசமாக அசுத்தப்படுத்தப்பட்டுள்ள நதி கங்கைதான்.

வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் பாவப்படும் நிலம் இந்திய நிலம்தான்.

காற்றும் சீர்கெட்டுள்ளது, நீரும் அசுத்தமாக இருக்கிறது, நிலம் வளமிழந்திருக்கிறது.

இந்நிலையில், இயற்கைக்கு எதிரான ஆயிரக்கணக்கான திட்டங்கள் இங்கே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. நாடு முழுக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது.

நிலமை இப்படி இருக்க, அமைச்சர் இவற்றை மூடி மறைத்து அறிக்கை வாசிப்பதும் பிரதமர் சுற்றுச்சூழலுக்கான விருதினைப் பெருமையோடு பெற்றுக்கொள்வதும் அவல நகைச்சுவை அல்லாமல் வேறு என்ன?

- நரேஷ்

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon