மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஜாமீனில் விடுதலையாகும் கருணாஸ்

ஜாமீனில் விடுதலையாகும் கருணாஸ்

அவதூறு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போராட்ட வழக்கிலும் கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வரையும் காவல் துறையையும் அவதூறாக விமர்சித்திருந்த, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கோரி கருணாஸ் மனுதாக்கல் செய்திருந்தார். கருணாஸுக்கு போலீஸ் காவல் விதிக்க மறுத்த நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நேற்றைக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது, ரசிகர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் கீழ் வேலூர் சிறையில் வைத்து கருணாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது பதியப்பட்ட இரு வழக்குகளில், ஒரு வழக்கில் மட்டும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கிலும் ஜாமீன் கோரி கருணாஸ் மனுதாக்கல் செய்திருந்தார்.

அவதூறு வழக்கின் மீதான ஜாமீன் மனுவை நேற்று (செப்டம்பர் 28) காலை விசாரித்த சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் மன்றம், 30 நாட்களுக்கு கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் ஐபிஎல் வழக்கின் மீதான ஜாமீன் மனுவின் விசாரணை நேற்று மாலை நடைபெற்றது. விசாரணையில், கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என கருணாஸுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, வேலூர் சிறையில் இருக்கும் கருணாஸ் இன்று சிறையிலிருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon