மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சுற்றுலா: இந்தியாவை நம்பும் அமெரிக்கா!

சுற்றுலா: இந்தியாவை நம்பும் அமெரிக்கா!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 10 சதவிகிதம் வரையில் உயரும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

அமெரிக்க சுற்றுலாத் துறையைப் பிரபலப்படுத்தும் அமைப்பான பிராண்ட் யுஎஸ்ஏவின் தலைவரும் தலைமைச் செயலதிகாரியுமான கிறிஸ்டோபர் எல்.தாமஸ், இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “2017ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மொத்தம் 12.9 லட்சம் பார்வையாளர்கள் அமெரிக்காவுக்கு வருகை புரிந்திருந்தனர். இதன்மூலம் அமெரிக்காவுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் இந்தியா 11ஆவது இடத்தில் இருக்கிறது. எங்களது அமைப்பு சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் 10 சதவிகிதம் கூடுதலான அளவில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான நாடாகும். சென்ற ஆண்டில் இந்தியர்கள் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வதற்காகச் செலவிட்ட தொகை 15 பில்லியன் டாலராகும். இப்பிரிவில் இந்தியா ஆறாம் இடம் வகிக்கிறது. அமெரிக்காவின் சுற்றுலாவை இந்தியர்களிடையே பிரபலப்படுத்தும் வகையில், எங்களது வர்த்தகப் பங்குதாரர்களுடன் இணைப்பில் உள்ளதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இந்தியர்களிடையே சுற்றுலாவைப் பிரபலப்படுத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார். பிராண்ட் யுஎஸ்ஏ அமைப்பானது அமெரிக்காவின் சுற்றுலா மேம்பாட்டுச் சட்டம் 2009-இன் படி, தனியார் - அரசு பங்கீட்டில் உருவாக்கப்பட்ட முதல் சுற்றுலா அமைப்பாகும்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon