மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சபரிமலை தீர்ப்பு: கேரள கட்சிகளின் நிலைப்பாடு!

சபரிமலை தீர்ப்பு: கேரள கட்சிகளின் நிலைப்பாடு!

அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து கேரள அரசியல் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டினை விளக்கியுள்ளன.

அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று (செப்டம்பர் 28) தீர்ப்பளித்தது. 10 வயது முதல் 50 வயது வரையிலான அனைத்துப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், “நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும். இந்த தீர்ப்பு என்பது சமூகத்தின் எந்த துறைகளிலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கான வாய்ப்பை மறுக்கக்கூடாது. அவர்களை வலிமைப்படுத்துவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலில் நுழைவதற்குத் தடை இருப்பது நீக்கப்பட வேண்டுமென நான் சுட்டிக்காட்டிய போது அதற்கு எதிரான குரல்கள் பல திசைகளில் இருந்தும் ஒலித்தன. இந்து பெண்கள் விவகாரத்தில் தலையிடும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் முஸ்லீம், கிறிஸ்டியன் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனையில் தலையிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்” என்று தெரிவித்தார்.

கேரள எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, “சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு தடையில்லை, சில மரபுகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த நிலை என்பது மாறிவிட்டது. அதுபோல நாட்டில் உள்ள பல கோயில்கள் சொந்த சடங்கு மற்றும் பாரம்பரியங்களை கொண்டிருக்கிறது அவற்றை நாம் தீவிரமாக பிரதிபலிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அவற்றில் சில அம்சங்களைப் பற்றி மட்டுமே நான் இங்கு பேசினேன். முந்தைய காங்கிரஸ் அரசு கோயில் மரபுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சியும் தேவசம் போர்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் எடுத்தது” என்று கூறியுள்ளார்.

கேரள பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “ இந்த தீர்ப்பில் மாநில அரசும், தேவசம் போர்டும் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். இந்த விவகாரம் ஒரு மோதலாக மாறாமல் இருக்க வேண்டும். கடவுளை நம்பாத நிர்வாகம், இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. ஒரு பக்கத்தில் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையும் மற்றொரு புறத்தில் சம உரிமை போராட்டமும் நடைபெறுகிறது. இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றாக்கப்பட வேண்டும். சபரிமலையின் முக்கியத்துவத்தை விட்டுக்கொடுக்காமல் ஒருமித்த கருத்தை உருவாக்கி சமூக சமநிலை பேணப்பட வேண்டும்” என்றார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon