மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் போராட்டம்!

லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் போராட்டம்!

ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தையும் ஏமாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

2013ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டது. ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தா சட்டத்தை எல்லா மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் நெருக்கடி கொடுத்ததன் காரணமாக, கடந்த ஜூலை 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனைக் கண்டித்து ராமதாஸ் இன்று (செப்டம்பர் 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 83 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பைத் தமிழக அரசு இன்னும் அமைக்காதது ஈடு இணையற்ற மோசடி என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவது ஒப்பந்தங்களை வழங்குவதிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் தான். ஆனால், இவை இரண்டிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு இல்லை. அதேபோல், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்த புகார்களை லோக் ஆயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியோ, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியோ தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூட லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்படலாம் என்று அரசு கூறுகிறது. அதிமுகவின் மாவட்டச் செயலாளர் போன்று செயல்பட்ட பல முன்னாள் நீதிபதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களில் எவரேனும் லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டால், தமிழ்நாட்டில் ஊழலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அளவுக்கு வலிமையில்லாத லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்குக் கூட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியில் தொடங்கி, அனைத்து அமைச்சர்கள் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

இத்தகைய சூழலில் வலிமையான லோக் ஆயுக்தாவை அமைப்பதன் மூலம்தான் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஒட்டுமொத்த ஊழலையும் குத்தகை எடுத்துள்ள ஆளுங்கட்சியினர், அதற்குத் தடையாக இருக்கும் என்பதால்தான் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கத் தயங்குகின்றனர். தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராதநிலையில், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதைத் தமிழக அரசு தாமதப்படுத்தி வருகிறது.

லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் தான் லோக்ஆயுக்தாவை பினாமி அரசு தாமதப்படுத்துகிறது. லோக்ஆயுக்தா சட்டத்தை இயற்றிவிட்டு லோக்ஆயுக்தாஅமைப்பை உருவாக்காமல் தாமதப்படுத்துவதை ஏற்கமுடியாது.

தமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 6ஆம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைகின்றன. அதற்குள் அப்பழுக்கற்ற முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படாவிட்டால், சட்டம் இயற்றப்பட்டதன் 100ஆவது நாளில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon