மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

பால் ஏற்றுமதியாளர்களுக்குச் சலுகை!

பால் ஏற்றுமதியாளர்களுக்குச் சலுகை!

28 வகையான பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வரிச் சலுகையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் அரசு தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்திய வணிக ஏற்றுமதித் திட்டத்தின் கீழ் தற்போது 28 பால் பொருட்களின் ஏற்றுமதிக்கான வரிச் சலுகையை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. பாலாடைக் கட்டி, தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு அரசு தரப்பிலிருந்து வரிக் கடன் சலுகை இனி அதிகமாகக் கிடைக்கும். ஏற்றுமதியாகும் பால் பொருள் மற்றும் ஏற்றுமதியாகும் நாடு ஆகியவற்றைப் பொறுத்து வரிச் சலுகை இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய வணிக ஏற்றுமதித் திட்டத்தின் கீழ் பால் பொருட்களுக்கான ஏற்றுமதி வரிச் சலுகை தற்போதுள்ள 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மோர், பாலாடைக் கட்டி, பாலாடைக் கட்டி பவுடர், ஆடை நீக்கப்பட்ட பால், குழந்தைகளுக்கான பால் உணவு, உறையவைக்கப்பட்ட பால் ஆகிய பொருட்களின் ஏற்றுமதிக்கான வரிச் சலுகை உயர்த்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் மகாராஷ்டிர மாநில பால் விவசாயிகளுக்குச் சற்று ஆறுதல் கிடைத்திருக்கும். அங்கு அதிக விநியோகம் காரணமாகப் பால் விலை மிகவும் குறைந்துவிட்டதாகத் தொடர் போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon