மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஆஸ்கர் நாயகனுடன் அருண்ராஜா

ஆஸ்கர் நாயகனுடன் அருண்ராஜா

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன் முறையாக இணைந்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

திரைத்துறையில் இயக்குநராக வரவேண்டுமென்ற லட்சியத்தோடு வந்த அருண்ராஜா காமராஜ் தற்போது ‘கனா’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆனால் அதற்கு முன் பாடலாசிரியராக அறிமுகமான அருண்ராஜா , குறுகிய காலத்திலேயே அனிருத், ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் முதலானோர் இசை அமைப்பில் பல படங்களுக்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்பை பெற்றார். உச்சமாக, ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் ‘நெருப்புடா’ என்ற பாடல் மூலம் பிரபலமானார்.

குறிப்பாகத் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக வருபவர்களின் உயர்ந்த லட்சியம், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் எழுதிவிட வேண்டும் என்பது. தற்போது அந்த வாய்ப்பு அருண்ராஜாவிற்கு கிடைத்துள்ளது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கி வரும் திரைப்படம் ‘சர்வம் தாள மயம்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் இடம்பெறும் அறிமுக பாடலான ‘பீட்டர் பீட் ஏத்து’ என்று துவங்கும் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமாரே பாடியுள்ள இந்த பாடல் மூலம், முதன் முறையாக ரஹ்மானுடன் இணைந்துள்ளார் அருண்ராஜா. இசையை மையமாக வைத்து உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, பக்தியை பாகுபாட்டால் ஒடுக்க முடியாது, அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலைக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 28) தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு, இயக்குநர் ராஜீவ் மேனன் வரவேற்பு தெரிவித்துள்ளார். “அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும் சபரிமலைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், பெண்கள் மீதான பாகுபாடு மட்டும் ஒரு நீண்ட சர்ச்சையாக இருந்தது. உச்ச நீதிமன்றம் தனது துணிச்சலான தொலைநோக்கு பார்வையை நிரூபித்துள்ளது. நாட்டில் பாலின சமத்துவத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon