மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பாஜகவில் சேர ரூ.30 கோடி பேரம்!

பாஜகவில் சேர ரூ.30 கோடி பேரம்!

பாஜகவில் சேர்ந்தால் ரூ.30 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக அக்கட்சியினர் பேரம் பேசுவதாகக் கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. “இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். மீண்டும் முதல்வராகி விட வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா முயன்று வருகிறார்” என்று குமாரசாமி நேற்று (செப்டம்பர் 28) குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் பாஜகவில் சேர்ந்தால் ரூ.30 கோடி தருகிறோம் என்று பேரம் பேசுவதாகக் கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கர் தெரிவித்துள்ளார். பெலகாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியைக் கலைக்க பாஜகவினர் முற்படுகின்றனர். அக்கட்சியில் சேர்ந்தால் ரூ.30 கோடியும், அமைச்சர் பதவியையும் தருவதாகத் தெரிவித்தனர்.

நான் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது பாஜக தலைவர்கள் சிலர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு இவ்வாறு பேசினர். அவர்கள், பேசியதை மொபைலில் பதிவுசெய்து, அதை காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் காட்டினேன். காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுத்து கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக செய்த சதியைப் பகிரங்கப்படுத்த விரும்பினேன். எந்தச் சூழலிலும் காங்கிரஸை விட்டுச் செல்ல மாட்டேன் என்று லட்சுமி ஹெப்பாள்கர் கூறினார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon