மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

அதிர்ச்சியில் பக்தர்கள்:பொன்.ராதா

அதிர்ச்சியில் பக்தர்கள்:பொன்.ராதா

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பக்தர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், “10 வயது முதல் 50 வயது வரையிலான அனைத்துப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 29) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “பாரம்பரியம் பாரம்பரியமாக வழிபாட்டுத் தலங்களுக்கென்று சில முறைகளைக் கடைபிடித்து வருகிறார்கள். அந்த முறைகள் அப்படியே இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பும்போது, இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் பக்தர்களுக்கு உருவாக்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எந்தவொரு அரசியல் விவகாரமாக இருந்தாலும் பாஜகவை மையப்படுத்தாமல் அரசியல் நடத்த முடியாது என்பதை திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் உணர்ந்துள்ளன. பாஜகவை குற்றம் சாட்டுவது அல்லது பாராட்டுவது என்ற நிலையில்தான் தற்போது அரசியல் சென்றுகொண்டிருக்கிறது. தமிழக அரசியலின் மையப்புள்ளியாக பாஜக இருந்துகொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவினரிடம் கேட்டால் திமுகவின் செயல்பாடுகளுக்கு பின் பாஜக இருப்பதாக கூறுவார்கள். திமுகவிடம் கேட்டால் அதிமுகவுக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறுவார்கள். ஆனால் நாங்கள் யாருக்கு பின்னாலும் இல்லை. அனைவருக்கும் முன்னோடியாக இருந்துகொண்டிருக்கிறோம். எல்லோரும் எங்கள் பின்னோடியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ரஃபேல் விவகாரம் குறித்த கேள்விக்கு, “அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் தற்போதே தாக்கும் என்பதை அவர்கள் நிரூபித்துவருகிறார்கள். இதற்கான விளக்கங்களை உரிய துறையின் அமைச்சர்கள் தந்துள்ளனர். இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை. எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு விளக்கம் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று பதிலளித்தார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon