மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

மாநில அரசுகளுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

மாநில அரசுகளுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

நாடு முழுவதும் உள்ள நதிகள் மோசமாக மாசடைந்துள்ளதைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் 2 மாதங்களுக்குள் நதிகளை சுத்தம் செய்யும் செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நேற்று (செப்-28) உத்தரவிட்டுள்ளது.

தி இந்து நாளிதழில் கடந்த 17ஆம் தேதியன்று மத்திய மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் அறிக்கையைக் குறிப்பிட்டு நாடு முழுவதும் மாசடைந்துள்ள நதிகளின் எண்ணிக்கை 302இலிருந்து 351 வரை அதிகரித்துள்ளதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தியை அடிப்படையாகக்கொண்டு, தானாக முன்வந்து இதை வழக்காக எடுத்துக் கொண்டது பசுமைத் தீர்ப்பாயம். பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் கூறுகையில், நதிகளின் நிலை திருப்தி அளிப்பதாக இல்லை, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த நதிகளில் குளிக்கும் அளவுக்காவது நீரை சுத்தமாக்க வேண்டும். குறைந்தபட்ச தரத்திலாவது நதிகளின் நீர் இருக்க வேண்டும். எனவே அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் ஒரு செயல் திட்டம் தயாரிக்க வேண்டும். இந்த செயல் திட்டத்தை இரு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசுகளின் மாசுக்கட்டுபாட்டு வாரியங்கள் மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 4 உறுப்பினர்களைக்கொண்ட கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். இந்த கமிட்டியே செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.

மேலும்,செயல் திட்டத்தைத் தயாரிக்கத் தவறினால் அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமைச் செயலர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon