மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

விடுப்பு வழங்காததால் தீக்குளித்து மரணம்!

விடுப்பு வழங்காததால் தீக்குளித்து மரணம்!

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு விடுப்பு வழங்காத அலுவலரைக் கண்டித்து, மின்வாரிய ஊழியர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் இன்று (செப்டம்பர் 29) தருமபுரியில் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதூர் ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் என்ற சாமிக்கண்ணு. இவர் பொம்மிடி மின்சார வாரிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கவிருப்பதால் விடுப்பு அளிக்குமாறு, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் சக்திவேலிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு விடுப்பு வழங்க சக்திவேல் மறுப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

விடுப்பு கிடைக்காத காரணத்தால் மனமுடைந்த சண்முகம், நேற்று (செப்டம்பர் 28) பொன்னகரம் அருகே உள்ள பருவதனஹள்ளி சுடுகாட்டுக்குச் சென்று தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் வலியால் துடித்த சண்முகத்தை, அப்பகுதி மக்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

80 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon