மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

அதிமுகவை நெருங்குகிறார் திருமாவளவன்: அமைச்சர்!

 அதிமுகவை நெருங்குகிறார் திருமாவளவன்: அமைச்சர்!

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அழைத்தால் தானும் பங்கேற்பதாக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதன் மூலம் அவர் அதிமுகவுடன் நெருங்கி வருகிறார் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (செப்டம்பர் 28) வள்ளுவர் கோட்டத்தில் ஏழு தமிழர் விடுதலை, பத்தாண்டுகளைக் கடந்த இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு வந்துள்ளதா?’’ என்று ஒரு செய்தியாளர் கேட்க, ‘’வரவில்லை. வந்தால் கலந்துகொள்வேன்’’ என்ற ரீதியில் பதிலளித்தார் திருமாவளவன்.

இன்று (செப்டம்பர் 29) சென்னையின் முன்னாள் மேயர் சிவராஜின் 127ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகிலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து திருமாவளவன் வெளியிட்ட கருத்து பற்றி பேசினார்.

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவானது அரசு விழா என்பதால் கட்சி சார்பாக யாரையும் அழைக்க முடியாது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அழைத்தால் தானும் பங்கேற்பதாக தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது மிகவும் நல்ல விஷயம். அவர் எங்களுடன் நெருங்கி வருகிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது. அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்”என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.

ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே விளக்கம் அளித்துவிட்டார் திருமாவளவன். இன்று அதே தங்கசாலையில் சிவராஜ் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,

“எம்ஜிஆர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதன் பொருளில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அழைத்தால் கலந்து கொள்வேன் என்று தெரிவித்தேன். ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை எம்ஜிஆர் கொண்டு வந்தார். சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்ததோடு மட்டுமில்லாமல் அதனை வெற்றிகரமாகவும் செயல்படுத்தியர் எம்ஜிஆர்”என்று எம்.ஜி.ஆரை பாராட்டியிருக்கிறார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon