மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தோனி தகர்த்த ஸ்டம்புகள்!

தோனி தகர்த்த ஸ்டம்புகள்!

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி மீண்டும் ஆசியக் கோப்பை சாம்பியன் ஆகியுள்ளது. ஆனாலும் இறுதிப் போட்டியில் ஒரு சாம்பியன் அணிக்கான ஆட்டத்தினை இந்தியா வெளிப்படுத்தவில்லை எனவும், உலகக் கோப்பை நெருங்கிவரும் நிலையில் இந்தியாவின் இத்தகைய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை எனவும் ரசிகர்கள் தொடங்கி கிரிக்கெட் வல்லுநர்கள் வரை பலரும் கூறிவருகின்றனர்.

உலகக் கோப்பைக்கு இன்னும் நாள் இருப்பதால் இந்திய அணி தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு மீண்டும் பலம் மிக்க ஓர் அணியாக உலகக் கோப்பையை எதிர்கொள்ளும் என நம்பலாம். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில குறிப்பிட்ட சாதனைகள் குறித்து இங்கே காண்போம்.

இப்போட்டியில் வங்கதேச வீரர் மெஹதி ஹாசன் தனது அணியின் பேட்டிங்கைத் தொடங்கி வைத்தது போலவே தனது அணியின் பந்துவீச்சையும் தொடங்கிவைத்தார். இதன் வாயிலாக ஒருநாள் போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டையும் துவக்கி வைத்த 5ஆவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். முன்னதாக, மனோஜ் பிரபாகர், நீல் ஜான்சன், கிறிஸ் கெயில், முகமது ஹஃபீஸ் ஆகியோர் இச்சாதனையைப் படைத்துள்ளனர். மனோஜ் பிரபாகர் மூன்று முறை இதை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணி 7ஆவது முறையாக ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. இதன் வாயிலாக அதிக முறை ஆசியக் கோப்பையை வென்ற அணியாகத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறது.

நேற்றைய போட்டியில் லிட்டன் தாஸை ஸ்டம்பிங் செய்ததன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் விழக் காரணமானவர் எனும் சிறப்பைப் பெற்றார் விக்கெட் கீப்பர் தோனி.

லிட்டன் தாஸ் நேற்று அடித்த 121 ரன்கள்தான் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச வீரர் ஒருவரின் தனி நபர் அதிகபட்ச ரன்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon