மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

அம்மனின் மாதவிடாய் காலம்: கொண்டாடும் மக்கள்!

அம்மனின் மாதவிடாய் காலம்: கொண்டாடும் மக்கள்!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. அய்யப்பன் தீவிர பக்தர்களோ இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அய்யப்பன் கோவிலுக்குள் நுழைவதை அனுமதிப்பது என்பது பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை மையமாக வைத்துத்தான்.

ஆனால், இதே இந்தியாவில்தான் அம்மனின் மாதவிடாய் காலத்தைத் திருவிழாவாகக் கொண்டாடுகிற, யோனி பீடத்தை வழிபாட்டுக்குரிய ஒன்றாக வணங்குகிற அதிசயமும் நிகழ்கிறது.

அசாம் தலைநகர் கவுகாத்தி அருகே பிரம்மபுத்திரா நதிக்கரையில் நிலாச்சல் மலைப் பகுதியில் அமைந்திருப்பது காமாக்யா கோயில். இந்த காமாக்யா கோயிலின் புராணங்களின்படியான தலவரலாறு இதுதான்... ‘தட்சனால் சதிதேவி அவமதிக்கப்படுகிறாள். இதனால் அவள் நெருப்பில் விழுந்து உயிர் துறக்கிறாள். இறந்த அந்த உடலுடன் சிவபெருமான் ஊழித் தாண்டவமாடுகிறார். உலகமே அதிர்ந்து இருளில் மூழ்கி அழியக் காத்திருக்கிறது. அப்போது மகாவிஷ்ணு தமது சக்கரத்தை ஏவி சதிதேவியின் உடலை 51 துண்டுகளாகச் சிதறடிக்கிறார். அதில் சதிதேவியின் யோனி பகுதி விழுந்த இடம்தான் இந்த காமாக்யா கோயில்”.

இந்தக் கோயிலில் வழிபாட்டு முறையே வித்தியாசமானதாக இருக்கும். ஒரு குகைக்குள் இறங்கினால் பாதாளத்தில் கருவறை இருக்கும். கருவறையில் ஒற்றை எண்ணெய் விளக்கு மட்டும்தான்...

கருவறை மேடையைச் சுற்றிலும் தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணீருக்கு அடியில் இருக்கும் இடம்தான் வழிபாட்டுக்குரியது.

அதைக்கூட அங்கே நிற்கும் பூசாரிகள்தான் நம் கையைப் பிடித்துத் தொடவைத்து வழிபடச் செய்வர். அப்படித் தண்ணீருக்கு அடியில் இருக்கும் இடம்தான் அம்மனின் ‘யோனி பீடம்’.

இக்கோயிலில் ஆண்டுதோறும் அம்பாபுஜி மேளா என்ற திருவிழா ஜூன் மாதத்தின் நடுப் பகுதியில் கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது 3 நாட்கள் இந்த கோயில் மூடப்பட்டிருக்கும்.

கோயில் நடை மூடப்பட்டிருந்தாலும் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் நடை திறப்புக்காக இரவும் பகலும் காத்திருப்பார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சாதுக்கள், நிர்வாண சாமியார்கள் குழு வேள்விகளை நடத்திக்கொண்டிருப்பார்கள்.

எதற்காக இந்த 3 நாட்கள் மூடப்படுகின்றன தெரியுமா?

அது அம்மனின் ‘மாதவிடாய்’ காலமாம்.. இந்த நேரத்தில் அம்மனின் யோனி பீடம் மூழ்கியிருக்கும் நீர் பகுதி செந்நிறமாக மாறியிருக்குமாம். இந்த 3 நாட்கள் மாதவிடாய் காலம் முடிந்த பிறகு அம்மன் நீராட்டப்பட்டு கோயில் நடைகள் திறக்கப்படும்.

மாதவிடாய் காலத்துக்குப் பின்னர் அம்மனை தரிசிக்க பல லட்சம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதும் அங்கே நெரிசல் ஏற்பட்டு சிலர் மாண்டு போவதும் ஆண்டுதோறும் அம்பாபுஜி மேளாவின் காட்சிகள்தான்.

இதே காமாக்யா கோயிலில் அம்மனின் யோனி பீடத்திலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பு நிறத் துணி பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

இப்படி பெண் தெய்வத்தின் மாதவிடாய் காலத்தை ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுகிற பக்தர்கள் இருக்கிற தேசத்தில்தான் பெண்களின் மாதவிடாயை முன்வைத்து அவர்களுக்கு வழிபாட்டு உரிமையும் மறுக்கப்படுகிற நிலைமை இருக்கிறது,

மா.ச. மதிவாணன்

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon