மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

வெளிநாட்டில் கல்வி: தேவை 80 சதவிகிதம் மதிப்பெண்!

வெளிநாட்டில் கல்வி: தேவை 80 சதவிகிதம் மதிப்பெண்!

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 80 சதவிகிதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதிச் சான்று வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்து, மேற்கிந்தியத் தீவுகளில் மருத்துவப் படிப்பை முடித்த தாமரைச்செல்வன் என்பவர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் மருத்துவராகப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி கடந்தாண்டு உத்தரவிட்டார். அதேசமயம், குறைந்த மதிப்பெண்களுடன், பண பலத்தின் மூலம் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான தகுதி குறித்துப் பதிலளிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் நேற்று (செப்டம்பர் 28) வெளிநாட்டுக் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கான தகுதி குறித்து மருத்துவ கவுன்சில் பதிலளித்தது. அப்போது, நீட் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களைச் சேர்த்து 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 90 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை உள்ளதால், வெளிநாட்டுக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வு மதிப்பெண்களை 80 சதவிகிதமாக நிர்ணயிக்க வேண்டும் எனவும், 80 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களை வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதிச்சான்று வழங்கக் கூடாது எனவும், விசாரணையின் முடிவில் மத்திய அரசுக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon