மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிம்டாங்காரன்: விளக்கமளித்த விவேக்

சிம்டாங்காரன்: விளக்கமளித்த விவேக்

‘சர்கார்’ பாடலுக்கு சமூக வலைதளங்களில் எழுந்த கிண்டலுக்கு, பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பாடல்களை விவேக் எழுதியுள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவின் முன்னோட்டமாக, ‘சிம்டாங்காரன்’ என்ற பாடலை மட்டும் சமீபத்தில் வெளியிட்டது படக்குழு.

‘சிம்டாங்காரன்’ பாடல் மிக அதிகப் பார்வையாளர்களைப் பெற்று விஜய் ரசிகர்களின் வரவேற்புக்கு உள்ளானாலும், பலர் இந்தப் பாடலைக் கேலியும் கிண்டலும் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த பாடலில் உள்ள ‘சிம்டாங்காரன்’ உள்ளிட்ட ஒருசில வார்த்தைகள் ‘பாகுபலி’ படத்தின் மொழியை போல் இருப்பதாகவும், இதற்கு தனி டிக்‌ஷ்னரி போட வேண்டும் என்றும், ரஹ்மான்தான் இசையமைத்தாரா என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்தப் பாடலை கிண்டலுடன் விமர்சனம் செய்தவர்களுக்கு பாடலாசிரியர் விவேக் பதில் அளித்துள்ளார். அதில், “நான் கேலி, கிண்டல் செய்பவர்களை கண்டு கூச்சப்பட்டது கிடையாது. உங்கள் இடத்தில் இருந்து நானும் இந்த பிரச்சினையை புரிந்துகொள்கிறேன். அந்த நேரத்தில் கிண்டல் செய்பவர்கள் படத்தோடு பாடலைக் கேட்டால் தங்கள் மனதை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்குப் பின்னரும் இந்த பாடலில் மாற்றம் தேவை என்று கூறினால், இனிவரும் பாடல்களில் அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்கிறேன். இந்தப் பாடலின் வரிகள் படத்தின் காட்சிக்கு பொருத்தமாக இருந்ததால்தான் இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் ரஹ்மான் ஆகியோர் அனுமதித்தனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த பாடலைப் பார்த்து ரசித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon