மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திப்பேன்!

ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திப்பேன்!

ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திப்பேன் என்று ஜாமீனில் விடுதலையான பின் கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.

முதல்வரையும் காவல் துறையையும் அவதூறாக விமர்சித்ததாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸை, கடந்த 23ஆம் தேதி நுங்கம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஐபிஎல் போராட்டத்தின்போது போடப்பட்ட இரு வழக்குகளின் அடிப்படையில் வேலூர் சிறையில் வைத்து கருணாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிற்கும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இரு வழக்குகளிலும் கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 28) உத்தரவிட்டது. இதனையடுத்து வேலூர் சிறையிலிருந்து கருணாஸ் இன்று காலை ஜாமீனில் வெளிவந்தார். அவருக்கு சிறையின் வளாகத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பைச் சேர்ந்தவர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “பொய் வழக்குகளை புனைந்த ஒரு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, உள் துறை செயலாளர், டிஜிபி, சென்னை கமிஷனர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்திருந்தோம். சம்பந்தப்பட்ட ஒரு அதிகாரியை விசாரிக்காமல், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒட்டுமொத்த அதிகாரிகளும் சேர்ந்துகொண்டு என் மீது வழக்கு தொடுப்பதை மக்கள் வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிலையில் எனக்காக குரல் கொடுத்தவர்களுக்கும், என்னை பழிவாங்க வேண்டும் என்ற ஆவலோடு இருந்தவர்களுக்கும், என் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய கருணாஸ், எந்த நிலை வந்தாலும் தன்னிலை மாறாது, இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon