மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

போலீஸ் பெயரில் பாலியல் வன்கொடுமை!

போலீஸ் பெயரில் பாலியல் வன்கொடுமை!

ஏற்காட்டில் தனியாக நின்ற பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் என்று கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இவர்கள் அத்துமீறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். தருமபுரியைச் சேர்ந்த கோமதி (22) என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துவந்தனர். பனியன் நிறுவனத்தைச் சார்ந்த மகளிர் விடுதியில் தங்கியிருந்தார் கோமதி. கடந்த புதன்கிழமையன்று (செப்டம்பர் 26) விடுப்பு எடுத்துக்கொண்டு, தருமபுரி செல்வதாக அலுவலகத்தில் கூறினார். வாசுதேவனுடன் சேர்ந்து, கார் மூலமாக ஏற்காட்டுக்குச் சென்றார்.

ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற இருவரும், இரவு அண்ணா பூங்கா ரவுண்டானா அருகிலுள்ள தனியார் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கினர். இரவு 11 மணிக்கு மேல் வாசுதேவன், கோமதி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதனால் வாசுதேவனுடன் கோபித்துக்கொண்டு, இரவு 11.5௦ மணியளவில் விடுதியிலிருந்து வெளியேறினார் கோமதி. சேலம் செல்வதற்காக, அண்ணா பூங்கா முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார்.

ஏற்காடு ஜெரினாக்காடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாச்சான் என்கிற விஜயகுமாரும், அவரது நண்பர் பீதை குமாரும், பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த கோமதியின் அருகே சென்று விசாரித்தனர். தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்ட விஜயகுமார், “எந்த ஊர், எங்கே வந்தாய்...”? என்று அதட்டல் தொனியில் பேசியுள்ளார். கோமதியைச் சமாதானம் செய்யும் நோக்கில் வந்த வாசுதேவனைத் தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்வது போல நடித்துள்ளார். விடுதியின் முன்பாக அவர் நிறுத்தியிருந்த மாருதி காரையும் திறந்து சோதனை செய்துள்ளார்.

காக்கி பேன்ட்டும் சட்டைக்கு மேலே ஜெர்கின், தலைக்குக் குல்லா அணிந்திருந்ததாலும், விஜயகுமாரின் உடலமைப்பும் நடவடிக்கையும் போலீசாரைப் போலவே இருந்ததாலும், வாசுதேவனும் கோமதியும் அவரை உண்மையான போலீஸ் என்றே நம்பினர். வாசுதேவனிடம் இருந்த அரைப்பவுன் தங்க மோதிரம், 1,000 ரூபாய் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு “காலையில் ஸ்டேஷனுக்கு வா...” என்று சொல்லி இருவரும் வாசுதேவனை விரட்டி விட்டனர்.

தனது ஆட்டோவில் கோமதியை ஏற்றிச் சென்ற விஜயகுமார், 2௦ஆவது கொண்டை ஊசி வளைவுக்கு மேலே வனத் துறை அலுவலகம் அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இரவு இரண்டு மணியளவில், தன்னுடைய ஆட்டோவிலேயே கோமதியை சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் விஜயகுமார்.

புதிய பேருந்து நிலையத்தில் தனிய நிற்கப் பயந்த கோமதி, அங்கிருந்து தருமபுரிக்குச் சென்றுள்ளார். காலையில் கோமதியைத் தேடிக்கொண்டு ஏற்காடு காவல் நிலையத்துக்குச் சென்றார் வாசுதேவன். அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஆனந்தனிடம் நடந்த சம்பவம் குறித்துப் புகார் கூறினார்.

தருமபுரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்குச் சென்ற கோமதி, அங்கிருந்து வாசுதேவனின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தன்னை போலீஸ் என்று சொல்லி அழைத்துச் சென்றவன் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்துத் தெரிவித்தார்.

வாசுதேவன் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்தனர். அப்போது, போலீஸ் என்று சொல்லி கோமதியை அழைத்துச் சென்றது நாச்சான் என்கிற விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அண்ணா பூங்கா அருகில் உள்ள ரவுண்டானா முன்பாக நின்றுகொண்டிருந்த விஜயகுமார், பீதை குமார் ஆகியோரைக் கைது செய்தனர் போலீசார்.

இதன் பின்னர், கோமதி சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். சேலம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோமதியிடம், பெண் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

கைது செய்யப்பட்ட விஜயகுமார், பீதை குமார் மீது வழிப்பறி, அடித்துத் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மிரட்டி கற்பழித்தல் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் தற்போது சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோர்களுக்குத் தெரியாமல் ஏற்காட்டுக்கு வரும் பலரை, விஜயகுமார் ஏமாற்றி மோசம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருக்கு முன்னாள் காவல் உதவி ஆய்வாளராக இருந்த ஒருவர் பக்கபலமாக இருந்துவந்தார் என்றும், அந்த துணிச்சலில்தான் விஜயகுமார் இப்போதும் போலீஸ் என்று சொல்லிக்கொண்டு பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார் என்றும் கூறுகின்றனர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon