மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

உச்ச நீதிமன்றத்தின் அபூர்வச் செயல்பாடு!

உச்ச நீதிமன்றத்தின் அபூர்வச் செயல்பாடு!

கடந்த ஐந்து நாட்களில் மட்டும், உச்ச நீதிமன்றம் 20 வழக்குகளுக்குத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வரும் அக்டோபர் 2ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக, அவர் தலைமையிலான அமர்வு பல முக்கிய வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கி வருகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் ஆதார், திருமண பந்தத்துக்கு வெளியே இருக்கும் உறவு உள்ளிட்ட 20 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 25ஆம் தேதியன்று கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்த வழக்கில், இந்த உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என்றும், நாடாளுமன்றத்திலேய இதைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

செப்டம்பர் 26ஆம் தேதியன்று ஆதார் சட்டபடி செல்லுமா என்ற வழக்கில், அரசியல் சாசனப்படி செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். அதே நாளில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்த தீர்ப்பு வெளியானது.

செப்டம்பர் 27ஆம் தேதியன்று திருமணத்துக்குப் பிறகு வேறொருவருடன் உறவு வைத்துக்கொள்வது குற்றமா என்ற வழக்கில், கணவர் மனைவியின் எஜமானர் அல்ல என தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த நாளிலே, அயோத்தியில் மசூதி இருக்குமிடத்தை மாநில அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

செப்டம்பர் 28ஆம் தேதியன்று, சபரிமலை வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்றும், இதில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது என்றும் தீர்ப்பு வழங்கியது.

“ஓய்வுபெறும் நீதிபதி ஒருவர் தனது கடைசி வாரப் பணியில் ஏராளமான வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதை இதற்கு முன் பார்த்ததில்லை” என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனில் மிஸ்ரா கூறியுள்ளார். கடந்த 5 நாட்களில் உச்ச நீதிமன்றம் 20 தீர்ப்புகள் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு அபூர்வமானது என்று பல்வேறு சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 1ஆம் தேதியன்று, தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா உச்ச நீதின்றத்தில் அமர்கிறார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகோய் உடன், அந்த இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். முதல்முதலாக வடகிழக்கு இந்தியாவிலிருந்து தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பவர் என்ற பெருமையைப் பெறப்போகும் ரஞ்சன் கோகாய், 13 மாத காலம் அந்த பதவியில் இருப்பார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon