மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

வசந்தபாலனின் பெருங்கனவு!

வசந்தபாலனின் பெருங்கனவு!

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு (செப்டம்பர் 28) நிறைவடைந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆர்யா பங்கேற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். மே மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இந்தத் தகவலை இயக்குநர் வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார். “நேற்று இரவோடு ஜெயில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ஜெயில் திரைப்படம் இரண்டு வருடங்களாகப் பெருங்கனவு, அந்த பேரருவியை தங்ககிண்டியில் அடக்கிடமுடியுமா இன்று இருக்கும் சினிமா பொருளாதார சிக்கலில், என்று தவித்துக் கொண்டிருந்தேன். அங்காடித்தெரு படத்தை போன்று இதுவும் என்னைப் பொருத்தவரை மிக தேவையான முக்கியமான பதிவு” என்று தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கிய வெயில், அங்காடித்தெரு ஆகிய படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றன. ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை. பிரம்மாண்டமாக உருவாகிய அப்படங்களைத் தொடர்ந்து தற்போது சென்னையை மையமாக வைத்தே ஜெயில் படத்தை இயக்கியுள்ளார். முந்தைய படங்களைவிட குறைந்த பொருட்செலவில், குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

பள்ளிப்பருவத்திலே படத்தில் நடித்த நந்தன் ராம், ‘பசங்க’பாண்டி, ஜெனிஃபர், மணிமேகலை, ‘பாகுபலி’ பட வில்லன் பிரபாகர், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ரேமண்ட் மேற்கொள்கிறார். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கிய நிலையில் விரைவில் படக்குழுவிடமிருந்து படம் பற்றிய அடுத்த அப்டேட்கள் கிடைக்க வாய்ப்புள்ளன.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon