மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தேர்தல் களம்: மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் மலருமா தாமரை?

தேர்தல் களம்: மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் மலருமா தாமரை?

பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இம்மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் அண்மையில் பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 லட்சம் பேர் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 லட்சம் பேர் மட்டுமே திரண்டதாகக் கூறப்படுகிறது.

அண்டை மாநிலங்களில் இருந்து எல்லாம் கூட நாற்காலிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தனவாம். ஒரே நேரத்தில் 20,000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல்கள் போடப்பட்டன.. குடிநீர் பாக்கெட்டுகளுக்கு மட்டும் ரூ.15 லட்சம் செலவு செய்ததாம் பாஜக. இப்படி ஒரே அமர்க்களப்படுகிறது தேர்தல் களம்.

மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் சட்டசபையில் மொத்த இடங்கள் 230. ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 116.

2013ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்: பாஜக- 165; காங்கிரஸ்; 58. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. சிவ்ராஜ்சிங் சவுகான் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக 3ஆவது முறையாகப் பதவியேற்றார்.

கருத்துக் கணிப்புகள்

எதிர்வரும் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெவ்வேறு விதமான முடிவுகளைத் தெரிவித்துள்ளன.

ஏப்ரலில் ஐபிசி 24 நடத்திய கருத்து கணிப்பில் ஆளும் பாஜக 101 இடங்களையும் காங்கிரஸ் 119 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்றது இந்தக் கருத்துக் கணிப்பு.

அதே ஏப்ரல் மாதம் டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பு பாஜக 153 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் கடந்த தேர்தலைப் போலவே காங்கிரஸுக்கு 58 இடங்கள்தான் கிடைக்கும் எனக் கூறியது.

மே மாதம் ஏபிபி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 35% வாக்குகளும் காங்கிரஸுக்கு 49% வாக்குகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

கடந்த மாதம் ஏபிபி-சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பு பாஜகவுக்கு 106 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவித்திருந்தது. காங்கிரஸோ பெரும்பான்மைக்குத் தேவையான 116ஐ தாண்டி 117 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் எனக் கூறியது.

கள நிலவரம்:

மத்தியப் பிரதேசத் தேர்தல் களம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டதாகத்தான் இருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ராமரை முன்னிறுத்திப் பிரசாரம் செய்துவருகிறது. இந்தப் பிரசாரம் மூலம் இந்துக்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்னும் பிம்பம் உடைபடும் என நம்புகிறார்கள்.

ஆளும் பாஜகவுக்கோ இடியாப்பச் சிக்கல். மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரையில் உயர் சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர்தான் காலம் காலமாக பாஜகவின் வாக்கு வங்கியினராக இருந்தனர். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள், காங்கிரஸின் வாக்கு வங்கிகளாக இருந்துவந்தனர்.

ஆனால் 2013ஆம் ஆண்டு தேர்தல் களம் மாற்றத்தை உருவாக்கியது. அத்தேர்தலில் 36% தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்தன. 2009ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் இது 5% கூடுதலாகும்.

மேலும் 2014 லோக்சபா தேர்தலிலும் 43% தாழ்த்தப்பட்டோர் வாக்குகளை பாஜக அறுவடை செய்தது. பழங்குடி மக்களின் 54% வாக்குகள் பாஜகவுக்குக் கிடைத்தன. உயர் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் எனப் பரவலாக அனைத்து இந்துக்கள் வாக்குகளையும் அறுவடை செய்த பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது எஸ்சி/எஸ்டி சட்டம் தொடர்பான வழக்கு.

தங்களுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் முதலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் போராட்ட களத்துக்கு வந்தனர். பின்னர் எஸ்சி/எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தபோது உயர் சாதியினர் போராட்டக் களத்துக்கு வந்தனர். இப்படித் தங்களது வாக்கு வங்கிகள் இரண்டும் பிளவுபட்டிருக்கும் நிலையில் தேர்தல் களத்தை எதிர்கொள்கிறது பாஜக. இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவைத் தரக்கூடும். அதையே தேர்தலுக்கு முந்தைய சில கருத்துக் கணிப்புகளும் வெளிப்படுத்தியுள்ளன.

- மா.ச. மதிவாணன்

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon