மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கர்நாடகாவைப் போல சட்டம் இயற்ற முடியுமா?

கர்நாடகாவைப் போல சட்டம் இயற்ற முடியுமா?

கர்நாடக மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் மரங்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலாளர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த கே.முத்துராமலிங்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். “தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வைத்தியலிங்கபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் ஒன்றுள்ளது. எவ்விதக் காரணமும் இல்லாமல், இந்த மரத்தை வெட்டுவதற்கு வருவாய்த் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் மரங்கள் பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின்படி 50க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டும் என்றால், அப்பகுதி மக்களிடம் கலந்தாலோசித்து, அவர்களது ஒப்புதலைப் பெற வேண்டும். கர்நாடகத்தில் உள்ளதைப் போல, மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தைத் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும். உடன்குடியில் உள்ள பழமையான வேப்ப மரத்தை வெட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (செப்டம்பர் 28) நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு வந்தது. அப்போது, மரத்தை வெட்டுவதற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தைப் போன்று தமிழகத்திலும் கொண்டு வருவது குறித்து, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலாளர் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon