மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பெண்களுக்கு அனுமதி : எதிர்க்கும் சிவசேனா!

பெண்களுக்கு அனுமதி : எதிர்க்கும் சிவசேனா!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து கேரளாவில் போராட்டம் நடத்தவுள்ளதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று நேற்று (செப்டம்பர் 28) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தீர்ப்புக்குக் கேரள மாநில அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கேரளத்தைச் சேர்ந்த அரச குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சனிசிங்கனாபூர் கோயிலின் கருவறை, மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவின் கருவறை ஆகியவற்றுக்குள் பெண்கள் நுழைய நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்து அனுமதி பெற்றுத் தந்த, மகளிர் நல ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சபரிமலைக்கு செல்வோம் என்று தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தொடர்பாகக் கேரளா அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றன. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 1ஆம் தேதி கேரளாவில் காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை 12 மணி நேர முழு அடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது. சபரிமலைக்கு செல்வதில் முன்பு இருந்த பழக்க வழக்கங்களையே பின்பற்ற வேண்டும். அனைத்து இந்து அமைப்புகளும் போராட்டத்துக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செயப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், “உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தேவசம் போர்டு உள்ளது.

தீர்ப்பின் முழு விவர நகல் கிடைத்தவுடன் அதனை முழுமையாக படித்த பிறகே இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த உத்தரவின்படி பெண்கள் சபரிமலைக்கு வரும்போது ஏற்படும் பிரச்னைகள், பெண்களுக்காக ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கேரள அரசிடம் ஆலோசித்து தீர்மானிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon