மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ப்ரிட்ஜ் வெடித்து 4 பேர் பலி!

ப்ரிட்ஜ் வெடித்து 4 பேர் பலி!

குவாலியர் நகரில் பக்கத்து வீட்டிலுள்ள ப்ரிட்ஜ் வெடித்து சுவர் இடிந்ததினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்திலுள்ள தர்பன் காலனியில் நேற்றிரவு (செப்டம்பர் 28) திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு, அப்பகுதியில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது தான், அங்கிருந்த ஒரு வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது தெரிய வந்தது. இதனால் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர்.

எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்த நள்ளிரவில் இந்த சத்தம் கேட்டது என்று அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறினர் காவல் துறையினர். காவல் துறையினரின் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த அனந்தராம் பரிகர், அவரது மனைவி உமா, மகள்கள் குஷி மற்றும் காஷிஷ் ஆகியோர் பலியானது கண்டறியப்பட்டது. அனந்தராமின் மகன் உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில் வீட்டினுள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ச்சியாக நடந்த விசாரணையின் முடிவில், பக்கத்து வீட்டில் இருந்த ப்ரிட்ஜ் வெடித்ததனால் இந்த விபத்து நடந்தது கண்டறியப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட வீட்டில் இந்த விபத்தினால் எந்த சேதமும் ஏற்படவில்லை. ப்ரிட்ஜில் ஏற்பட்ட அழுத்தத்தினால் இந்த சோக சம்பவம் நடந்ததாகத் தெரிய வந்துள்ளதையடுத்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரெப்ரிஜிரேஷன் என்ஜினியர்கள் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதன் முழுவிவரமும் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon