மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

பெரம்பலூர்: திருவிழா குழப்பம்!

பெரம்பலூர்: திருவிழா குழப்பம்!

பெரம்பலூர் அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையேயான மோதலைத் தடுக்க, இன்று முதல் (செப்டம்பர் 29) அக்டோபர் 4ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ராயப்பர், செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவின்போது சுவாமி வீதி உலா நடைபெறும். அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள், தங்கள் பகுதியில் வீதி உலா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், விழா நடைபெறும்போது இரு தரப்பினரிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு இன்று முதல் 3 நாட்கள் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், போலீசார் தரப்பில் இன்று ஒருநாள் மட்டும் விழா நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், 3 நாட்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணியினர் மற்றும் பக்தர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து, அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி உடையார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மூன்று நாட்கள் திருவிழா நடத்த அனுமதி வழங்கவும், விழாவுக்குப் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடுமாறு, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘பல ஆண்டுகளாக மும்பையில் நடைபெறும் ஹோலி பண்டிகையை நிறுத்த முடியுமா?’ என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து வி.களத்தூரில் மூன்று நாட்கள் திருவிழா நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். அதற்கு, காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சாமி ஊர்வலத்தைத் தங்கள் வீதி வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என்று கூறி ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்பதைக் கணக்கில் கொண்டு, வி.களத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவிட்டார். இந்த உத்தரவானது அக்டோபர் 4ஆம் தேதி வரை அமலில்இருக்கும்.

இதையடுத்து, அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்க அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு, ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு நடைமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றம் உத்தரவுப்படி, திருவிழாவை நடத்தலாமா? கூடாதா? என்ற குழப்பம் இப்பகுதிகளில் நிலவி வருகிறது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon