மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

நூற்றாண்டு விழா பேனர்கள் : நீதிமன்றத்தில் முறையீடு!

நூற்றாண்டு விழா பேனர்கள் : நீதிமன்றத்தில் முறையீடு!

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நாளை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆட்களை அழைத்து வருவதற்காக தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் வாகனங்களை அனுப்ப ஆட்சியாளர்கள் ஆணையிட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 29) பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தை ஒட்டிய அண்ணா சாலையின் 1.1 கி.மீ நீளமுள்ள பகுதியில் மட்டும் ஒரு புறம் 89 பதாகைகள், மறுபுறம் 49 பதாகைகள் என மொத்தம் 138 பதாகைகள் அதிமுகவினர் சட்டவிரோதமாக அமைத்துள்ளனர்” என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“பொது இடங்களில் விளம்பர பதாகைகள் அமைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பதாகைகள் அமைப்பதற்காக சாலைகளில் பள்ளம் தோண்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வளைத்து வளைத்து பதாகைகளை அமைத்துள்ளனர். விழா நடைபெறும் நந்தனத்தில் மட்டுமின்றி சென்னை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிமுகவினரின் பதாகைகள் பொதுமக்களை மிரட்டுகின்றன.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பதாகைகள் அமைக்கப்பட்டதற்காக முதல்வர், துணை முதல்வருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனி எந்த காலத்திலும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் விதிகளை மீறி பதாகைகளை அமைக்க மாட்டோம் என்று அவர்களிடமிருந்து உத்தரவாதம் பெறவும் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி ஆளும் கட்சியினர் சென்னையில் சட்டவிரோதமாக பேனர்கள் வைத்துள்ளதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியிடம் முறையீடு செய்துள்ளார். இதை ஏற்ற தலைமை நீதிபதி இவ்விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இன்றே அவசர வழக்காக எடுத்து நீதிபதி மணிக்குமார் விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon