மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

நிதி மோசடி: பாதிக்கப்பட்டவர் தற்கொலை!

நிதி மோசடி: பாதிக்கப்பட்டவர் தற்கொலை!

சேலத்தில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் திருமணத்திற்காக முதலீடு செய்யப்பட்ட பணம் ஏமாற்றப்பட்டதால், 3 சகோதரிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த அழகேசனின் மகள் ரேவதி. இவர், அங்குள்ள வின்ஸ்டார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தான் வேலை பார்த்து வரும் நிதி நிறுவனத்தில், தனது சகோதரிகள் மேனகா மற்றும் கலைமகள் ஆகியோர் திருமணத்திற்காக, இவர் 15 லட்ச ரூபாயை முதலீடு செய்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார். இதனால், அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனையடுத்து, அவரிடம் பணம் கேட்டார் ரேவதி. அப்போது, அவர் தகாத வார்த்தைகளால் ரேவதியைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 3 சகோதரிகளும், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில், மேனகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கலை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதி மட்டுமே, ஆபத்தான கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள மக்களிடம் பேசினோம். பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பேசிய சிலர், சேலத்தில் வின் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமாரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது என்றனர். “சதுரங்க வேட்டை படத்தில் வரும் எம்எல்எம் பிஸினஸ் மாதிரி மொபைல் ஷாப் முதல் ரியல் ஸ்டேட் வரை பல தொழில்கள் நடத்துபவர் சிவக்குமார். அத்தொழில்களில், அதிர்ச்சி தரும் வகையில் ஆஃபர் அறிவித்து அனைவருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்துவார். அதேபோல, அவர் மீது புகார்களும் அளவில்லாமல் குவியும். சமீபத்தில், ஒரு செக் மோசடி வழக்கில் கைதான சிவக்குமார், சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

பெரும்பாலும், இவருடைய நிறுவனங்களில் வேலைக்குப் பெண்களையே சேர்த்துக் கொள்வார். சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் என்பது தொடங்கி, ரியல் எஸ்டேட் கல்தா, பாலியல் புகார் என அடுக்கடுக்கான புகார்களோடு இவரது அலுவலகத்தின் எதிரே போராட்டங்கள் நடைபெறும். சில நேரங்களில் தீக்குளிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன” என்று கூறினர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ரேவதியின் சித்தப்பா தங்கராஜிடம் பேசினோம். “என் அண்ணனுக்கு 5 மகள்கள், இரண்டு பேருக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகளான மேனகாவுக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. வருகிற மாதம் கல்யாணம் நடைபெறவிருந்த நிலையில், முதலீடு செய்த 15,00,000 ரூபாய் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு என்னுடைய வங்கிக் கணக்கை ‘ப்ளாக்’ செய்துவிட்டார்கள். என்னால் பணம் தரமுடியாது என்று வின் ஸ்டார் நிறுவனர் சிவக்குமார் கூறிவிட்டார்.

இவர்கள் தற்கொலை செய்ய நினைத்ததற்கு முழுமுதற் காரணம் அவர்தான். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று (செப்டம்பர் 28) குமராமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேனகா இறந்துவிட்டார். இன்னும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுக்கவில்லை. போலீஸ் தரப்பிலிருந்து, இவர்களிடம் எந்தவித வாக்குமூலமும் வாங்கவில்லை. இன்னொரு பொண்ணு கலைமகள் யுனிவர்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சைக்காக நாங்கள் 13 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளோம். முதலீடு செய்த 15 லட்ச ரூபாய் மற்றும் மருத்துவச் செலவுக்கான 13 லட்ச ரூபாயைச் சேர்த்து, மொத்தம் 28 லட்சம் ரூபாயை இழப்பீடாகத் தர வேண்டும். இது மாதிரி இனி யாரும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

- வித்யா

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon