மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

இருவர் நட்பை அரசியலாக்காதீர்: ஸ்டாலின்

இருவர் நட்பை அரசியலாக்காதீர்: ஸ்டாலின்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர்-கலைஞர் நட்பை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவுக்கான அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்று தினகரன் தெரிவித்துவிட்டார். ஸ்டாலின் விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூற்றாண்டு நிறைவு விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். தலைவர் கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயுள்ள நட்பு குறித்தும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், அவருடையை பெருமைகளைப் பரப்புவதை விட திமுகவையும் கலைஞரையும் அவரது குடும்பத்தாரையும், கடுமையாக விமர்சிப்பது ஒன்றையே முதலமைச்சரில் தொடங்கி துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் முதன்மை இலக்காகக் கொண்டிருந்தனர்” என்று எடுத்துரைத்துள்ளார்.

“ உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பல நூறு விளம்பர பேனர்களை பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக பாதையெல்லாம் வைத்து நடத்தப்படும் விழா என்பதால், அதன் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு, நான் அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடில்லை. எம்.ஜி.ஆர் என் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர். கழகப் பிரச்சார நாடகங்களில் நான் பங்கேற்றபோது தலைமையேற்று சிறப்பித்தவர். அதனை நன்றியுடன் நினைவுகூர்ந்து, அவருடைய நூற்றாண்டு தொடக்கத்திலேயே முரசொலியில் “உங்களில் ஒருவன்” பகுதியில் எழுதியிருக்கிறேன் என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர்-கலைஞர் நட்பை அரசியலாக்காதீர்

மேலும், “அரசு சார்பிலான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மலருக்கும் என்னுடைய கட்டுரையைத் தந்திருக்கிறேன். எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். என்பதை பொது அரங்குகளிலேயே சொல்லியிருக்கிறேன். அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு. அதனை அரசியலாக்காமல் நாளையாவது எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டைக் கொண்டாட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon