மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

இயற்கை எரிவாயு விலை உயர்வால் பாதிப்பு?

இயற்கை எரிவாயு விலை உயர்வால் பாதிப்பு?

இயற்கை எரிவாயுவின் விலையை மத்திய அரசு 10 சதவிகிதம் வரையில் உயர்த்தியுள்ளதால் மின்சாரம் மற்றும் யூரியா உற்பத்திக்கான செலவுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் விலை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளின் விலை நிலவரங்களைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது இயற்கை எரிவாயுவின் விலை 3.06 டாலரிலிருந்து 3.36 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஒரு பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கான (mmBtu) விலையாகும். இந்தப் புதிய விலை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறையின் ஒரு அங்கமான பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியா தனது இயற்கை எரிவாயுவுக்கான ஒட்டுமொத்தத் தேவையில் பாதி அளவை இறக்குமதி வாயிலாகவே பெறுகிறது. இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலை இந்தியாவை விட இருமடங்கு அதிகமாகவே இருக்கிறது. தற்போது இயற்கை எரிவாயுவின் விலை 10 சதவிகிதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளதால் ONGC, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த விலை உயர்வு அறிவிப்பால் யூரியா உற்பத்தி மற்றும் மின்சாரக் கட்டணமும் உயரும் வாய்ப்புள்ளது.

கடைசியாக இயற்கை எரிவாயுவின் விலை சென்ற ஏப்ரல் மாதத்தில் 2.89 டாலரிலிருந்து 3.06 டாலராக உயர்த்தப்பட்டிருந்தது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon