மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கூவத்தூரில் நடந்ததைக் கூறத் தயார்: கருணாஸ்

கூவத்தூரில் நடந்ததைக் கூறத் தயார்: கருணாஸ்

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால் கூவத்தூர் விவகாரம் குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை கூறுவதற்குத் தயாராக இருக்கிறேன் என்று முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாக பேசிய வழக்கு, ஐபிஎல் போராட்ட வழக்கு ஆகியவற்றில் கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து இன்று காலை வேலூர் சிறையிலிருந்து வெளிவந்த கருணாஸுக்கு, முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் சென்னை வந்த கருணாஸ், நந்தனத்திலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “கருத்து சுதந்திரம் மோசமாக இருக்கிறது என்பதற்கு என்னுடைய கைதும் ஒரு உதாரணம். என்னை அச்சுறுத்தும் விதமாக என் மீது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசு திட்டமிட்டு பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. இது என்னுடைய குற்றச்சாட்டு மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள அனைவரின் குற்றச்சாட்டு. தேவரின் வரலாறு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது அனுமதி மறுக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டபோதும், அனுமதி மறுக்கப்பட்டது. எனக்கு சட்டமன்றத்தில் பேச்சுரிமை வழங்கப்படவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, முதல்வர் சட்டமன்றத்தில் அளித்த அறிக்கையை எதிர்த்து நான் செய்தியாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தினேன். அதிலிருந்து இந்த அரசு என் மீது பொய் வழக்குகளை போட்டுவருகிறது” என்று தெரிவித்தார்.

2009லிருந்து பல மேடைகளில் பேசியுள்ள தான் எந்த சமூகத்தைப் பற்றியும் தவறாக பேசியதில்லை. யாரையும் ஒருமையிலும் பேசியதில்லை. தன் மீது 75 பிரிவின் கீழ் ஒரு வழக்கு கூட இல்லை என்று குறிப்பிட்ட கருணாஸ், “என்னை மீண்டும் கைது செய்வதற்காக பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் என் மீது ஏதாவது வழக்கு இருக்கிறதா என்று தேடியுள்ளனர்” என்ற தகவலையும் தெரிவித்தார். .

கூவத்தூர் விவகாரம் குறித்த கேள்விக்கு, “தேவைப்பட்டால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அதற்கான விளக்கத்தை அளிக்கத் தயாராக இருக்கிறேன். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், தலைமை நீதிபதியிடம் கூவத்தூர் விவகாரம் தொடர்பாக எனக்குத் தெரிந்த தகவல்களை சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வேலூர் சிறையில் கருணாஸை சந்தித்தது குறித்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். அதில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களிடம், “ஜெயில்ல இருந்து வெளிய வந்தவுடனே கூவத்தூர் பத்திய முழு உண்மையையும் சொல்லப் போறேன்” என்று கருணாஸ் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில் அதன்வெளிப்பாடாகத்தான் கருணாஸ் இவ்வாறு பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon