மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

திமிங்கலங்கள் அழியும் அபாயம்!

திமிங்கலங்கள் அழியும் அபாயம்!

உலகின் கடல்களிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக கடல் அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

டென்மார்க்கிலிருந்து வெளியாகும் அறிவியல் இதழில் திமிங்கலங்கள் குறித்த ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் கூறியுள்ளதாவது:

கில்லர் வேல்ஸ் எனப்படும் ஆட்கொல்லி திமிங்கலங்கள் மாசடைந்த கடல் நீரினால் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வகை திமிங்கலங்கள் ஜப்பான், பிரேசில், இங்கிலாந்து, வடகிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் காணப்படுகின்றன. இவை வாழும் கடல்களிலும் சமுத்திரங்களிலும் ஆழத்தில் பரவலாகக் கிடக்கும் பிசிபி (Poly Chlorinated Biphenyls - PCB) எனப்படும் நச்சுள்ள ரசாயனத் துகள்களை விழுங்குவதால் அவை அழியும் நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘பிசிபி’க்கள் வயர்களிலும் மின்னணு சாதனங்களிலும் கட்டுமானத் தொழிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசான காரணத்தால் 1980களில் பயன்படுத்துவது உலகளவில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. ஆனால், இந்தியா போன்ற சில நாடுகளில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

25 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பிசிபி குறித்த ஆய்வில் நீரிலோ அல்லது மண்ணிலோ மக்கி போகாமல் சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகவே அவை இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவை மாறுபட்ட தட்பவெப்ப சூழலில் நீராவியாகின்றன. அவற்றின் துகள்கள் மீண்டும் பூமியிலேயே படிகின்றன. குறிப்பாகக் கடலின் ஆழத்தில் படிகின்றன. மேலும், அவை மிக நுண்ணிய துகள்களாக இருப்பதால் திமிங்கலங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் வயிற்றுக்குள் போகின்றன. இதனால் திமிலங்களின் உணவுப்பாதை தொடங்கி இரைப்பை வரை அனைத்தும் சீர் கெடத் தொடங்குவதால் அவை உயிரிழக்கத் தொடங்குகின்றன.

கடல்வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கிலியில் பிசிபிக்கள் எப்படியோ ஒரு வடிவத்தில் நுழைந்து கொள்கின்றன. கடல் புற்கள், பாசிகள் ஆகியவற்றில் படியும் பிசிபி துகள்களையும் சேர்த்தே கடல்வாழ் உயிரினங்கள் உண்கின்றன. இதில் அதிகமாகப் பாதிக்கப்படும் ஆட்கொல்லி திமிங்கலங்கள் முழுவதும் அழியும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 30 செப் 2018

chevronLeft iconமுந்தையது