மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஆக்கிரமிப்பு- முதல்வர் தலைமைச் செயலாளர் துணைபோயுள்ளனர்: ஸ்டாலின்

ஆக்கிரமிப்பு- முதல்வர் தலைமைச் செயலாளர் துணைபோயுள்ளனர்: ஸ்டாலின்

முதல்வரும், தலைமைச் செயலாளரும் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குத் துணைபோயிருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று (ஆக்டோபர் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “30 வருடங்களுக்கும் மேலாக, அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி அளித்த தீர்ப்பையும் மதிக்காமல், பல்வேறு நிலைகளில் முறையீடுகளை செய்தும் “அரசு நிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பேராசை - அராஜக மனப்பான்மையுடன்” ஒரு பல்கலைக்கழகம் நடந்து கொள்வதும், அதற்கு அதிமுக அரசில் உள்ள முதல்வர், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் துணை போவதும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே செயலிழக்கச் செய்து, எள்ளி நகையாடுவது போல் அமைந்திருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், “ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்து கல்வி போதிப்பது அந்தக் கல்வியின் ஒழுக்கத்தையும், மதிப்பையும் கெடுத்து விடும்” என்றும், “30 வருடங்களுக்கு மேலாக சிங்கிள் நயா பைசா கூட கொடுக்காமல் அரசு நிலத்தை பல்கலைக்கழகம் பயன்படுத்தியுள்ளது” என்றும் எச்சரிக்கை செய்த பிறகும், மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத் தரும் ஒரு பல்கலைக்கழகமே இப்படி சுய ஒழுக்கமின்றி, உயர்நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமென மதித்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

அந்த முறையீடு கடந்த 14.09.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஸ் சால்வே மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜரான நிலையில், தமிழக அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் கூட ஆஜராகவில்லை.

முதல்வரும் தலைமைச் செயலாளரும் அந்த அளவிற்கு சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குத் துணை போயிருக்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

அரசின் அத்தனை சதிகளையும் முறியடித்து அம்பலப்படுத்திடும் வகையில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே தீர்ப்பளித்து விட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “வேறு வழியின்றி ஒரு “எவிக்சன் நோட்டீஸ்” சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டாலும், அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் இடத்தைக் காலி செய்து அரசு வசம் ஒப்படைக்கும் எந்த முன்னேற்பாடுகளிலும் சாஸ்திரா பல்கலைக்கழகமும் ஈடுபடவில்லை; அதிமுக அரசும் அதுபற்றிக் கண்டு கொள்ளாமல் கண்களைப் பொத்திக்கொண்டு இருக்கிறது.

ஆக்கிரமித்த அரசு நிலத்தை காலி செய்யாமல் ஆளுநர் மாளிகைக்கு சாஸ்திரா பல்கலைக்கழகத் துணை வேந்தர் போய் வந்திருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. வினரும், சங் பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சந்தித்துக் கொண்டிருப்பதாக “சமூக வலைதளங்களில்” வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சாலையோரங்களில் குடியிருக்கும் ஏழைகளை காலி பண்ணவும், சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்திற்கு விவசாயிகளின் சொந்த நிலங்களைப் பறிக்கவும் காவல்துறையை ஏவி விட்ட அதிமுக அரசு, உச்சநீதிமன்றமே இறுதித் தீர்ப்பை அளித்து விட்ட பிறகும், சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை, நிலங்களை பறிமுதல் செய்ய காவல்துறை மூலம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் செயலற்று இருப்பது ஏன்? சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடுப்பது யார்?

இனியும் காலதாமதம் செய்யாமல் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் நிலத்தை உடனடியாகக் கைப்பற்றி, திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும்.

தலைமைச் செயலாளரோ, அதிமுக அரசோ உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பின் படி, அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon