மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

சிறப்புச் செய்தி: சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்கு செக்?

சிறப்புச் செய்தி: சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்கு செக்?

மா.ச.மதிவாணன்

சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதிக்கான பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுப் பாதை (SILK ROUTE) திட்டத்தைக் கிடப்பில் போடுவது குறித்து பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த பகீர் முடிவு சீன அரசை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக 2 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று முத்துமாலைத் திட்டம் மற்றொன்று பட்டுப் பாதை திட்டம். ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றுக்கான திட்டம் பட்டுப்பாதைத் திட்டமாகும். அதாவது சீனாவிலிருந்து வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் வரையிலான கடல்வழிப் போக்குவரத்தைத் தங்குதடையின்றி உருவாக்கிக் கொள்வதுதான் பட்டுப் பாதை திட்டம். இந்த பட்டுப் பாதைத் திட்டத்துக்குப் பாதுகாப்பாக, இக்கடல் வழியில் உள்ள பிற நாடுகளின் துறைமுகங்களை மேம்படுத்தி சீனாவின் கடற்படையை நிறுவுவதற்கான திட்டம் முத்துமாலைத் திட்டமாகும் (ONE BELT ONE ROAD).

அதேபோல, சீனாவிலிருந்து காஷ்மீர், பாகிஸ்தான் வழியாக வளைகுடா நாடுகளை எட்டும் வரையில் தரை வழிப் பாதையையும் உருவாக்கியிருக்கிறது சீனா. இதுவும் முத்துமாலைத் திட்டத்தின் ஒரு அங்கமாகும். பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகம் என்பது ஆப்கானிஸ்தானையும் ஈரானையும் தொட்டுவிடும் தொலைவில் உள்ளது. இந்த கவ்தார் துறைமுகத்தைக் கையகப்படுத்தி மேம்படுத்திய சீனா அங்கிருந்து தமது மாகாணங்களுக்கு ரயில் போக்குவரத்து பாதையை அமைத்தது. வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை எளிதாகச் சீனாவுக்கு கொண்டுசெல்வதற்காகவே இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சீனாவின் முத்துமாலை மற்றும் பட்டுப் பாதைத் திட்டத்தில் பாகிஸ்தான் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான், மாலத்தீவு ஆகியவற்றில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாலும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையிலும் படுமோசமான ஊசலாட்டங்கள் வெளிப்படுவதாலும் சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் புதிய இம்ரான் கான் அரசு, சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் தயக்கம் காட்டத் தொடங்கிவிட்டது. சீனாவின் நன்மைக்காக செயல்படுத்தப்படக் கூடிய பட்டுப் பாதைத் திட்டத்துக்கு பாகிஸ்தான் ஏன் ரூ.56,000 கோடி செலவிட வேண்டும், என்பதுதான் இம்ரான் கான் அரசின் கேள்வி. இதனால் இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதா? வேண்டாமா? என்னும் குழப்பத்தில் இருக்கிறது இம்ரான் கான் அரசு.

அதேபோல, மாலத்தீவில் மாரோ தீவை தனது கடற்படைப் பயன்பாடுகளுக்காக சீனா பயன்படுத்தி வந்தது. ஆனால் தற்போது அதிபர் தேர்தலில் இந்திய ஆதரவாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றிருக்கிறார். சீன ஆதரவாளர் யாமின் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இதனால் மாலத்தீவில் இனி சீனா செல்வாக்கு செலுத்த முடியுமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் எப்போதும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்தான். தெற்கு இலங்கையைச் சீனாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்த இலங்கை, வடகிழக்குப் பகுதிகளை இந்தியாவிடம் விட்டு வைத்திருக்கிறது. இலங்கை விவகாரத்தில் இந்தியா முழு வீச்சில் களமிறங்கத் தொடங்கினால் அங்கேயும் சீனாவின் செல்வாக்கு குறையும் நிலை உள்ளது. தெற்காசிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களால் தனது பட்டுப் பாதைத் திட்டம் பட்டுப் போய்விடுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறது சீனா.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018