மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு அனுமதி!

ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு அனுமதி!

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று (அக்டோபர் 1) ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துக் கடந்த ஆண்டு நெடுவாசலில் போராட்டம் நடத்தியதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்குப் ஓஎன்ஜிசி, கெயில், பிபிஆர்எல், வேதாந்தா, உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் இரண்டு இடங்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்துக்கு காவிரி டெல்டா பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்தில் காவிரியை ஒட்டிய கடல் பகுதியில் இருந்துதான் ஹைட்ரோ கார்பனை எடுப்போம் . ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் . தமிழகத்தில் காவிரி படுகை கடற்பகுதிகளில் தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய வேதாந்தா குழும நிறுவனரான அனில் அகர்வால்,” தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கும் வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். விரைவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்” என்று பேட்டியளித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழகத்திற்கு மூன்று இடங்களில் அனுமதி வழங்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். “காவிரிப் படுகையைப் பாலையாக்கி, கார்ப்பரேட்டுகளுக்கு அதனைக் கையளித்து, மண்ணின் வளங்களைச் சூறையாடச் செய்வதுதான் மத்திய பாஜக அரசின் ஒரே நோக்கம். மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் போன்ற பெட்ரோலியப் பொருட்களை எடுப்பதற்காக காவிரிப் படுகை மற்றும் சுற்று வட்டாரத்தை ஒருங்கிணைந்த பெட்ரோலிய மண்டலமாக பாஜக அரசு அறிவித்தது. இதனை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கிறது; நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் தொடர் போராட்டக் களங்களாகின. இதில் கதிராமங்கலத்தில் இன்றுடன் 500 நாட்களைத் தாண்டியும் போராட்டம் தொடர்கிறது. இருந்தும் அதையெல்லாம் கண்டுகொள்ளத் தயாராகயில்லை மத்திய அரசு.

இன்று தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் போடுகிறது. இந்த மக்கள் விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் தமிழகம் போர்க்களமாக” மாறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாகையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon