மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத் தலைப்பு!

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத் தலைப்பு!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு பற்றிய தகவலைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகராக வர வேண்டுமென்று திரைத் துறைக்கு வந்தவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. ஆரம்பத்தில் சிறு வேடங்களில் திரையில் தோன்றியவர் பின் ‘வாலி’ திரைப்படம் மூலம் இயக்குநராகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்தப் படம் நடிகர் அஜித்தின் டாப் ஐந்து படங்களில் ஒன்று. இதே வரிசையில் நடிகர் விஜய்க்கும் ‘குஷி’ திரைப்படம் அமைந்தது.

இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா ‘நியூ’ திரைப்படம் மூலம் இயக்கத்தோடு நாயகராகவும் களம் இறங்கினார். அதன்பின் பல படங்கள் நடித்திருந்தாலும், இவர் இயக்கி நடித்த ‘இசை’, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘இறைவி’ திரைப்படங்களே இவருக்கு நடிப்பில் பெயர் பெற்றுக் கொடுத்தன.

இதனையடுத்து நடிப்பில் முழு கவனம் செலுத்திவரும் எஸ்.ஜே.சூர்யா, ஸ்பைடர், மெர்சல் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நடிப்பில் தனி முத்திரை பதித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த வகையில் தற்போது இறவாகாலம், சர்கார் ஆகிய படங்களில் கவனம் செலுத்திவருகிறார்.

இதற்கிடையே ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ மற்றும் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா நடித்த ‘மாநகரம்’ ஆகிய படங்களை தயாரித்த ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த இரண்டு படங்களும் மிக பெரிய வெற்றிப் படங்களாக அமைந்ததோடு விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் எஸ்.ஜே,சூர்யாவோடு பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அனைத்துப் படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இந்தப் படத்தின் டைட்டிலை அக்டோபர் 1ஆம் தேதியான இன்று மாலை 5 மணிக்குப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர் முதலானவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon