மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

உங்கள் மனசு: சிறுமிக்கும் பெண்ணுக்குமான எல்லைக்கோடு எது?

உங்கள் மனசு: சிறுமிக்கும் பெண்ணுக்குமான எல்லைக்கோடு எது?

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

மனதை ஆராய்ந்து, வாழ்வை அலசும் சிறப்புத் தொடர்

இன்றைய இளைய தலைமுறையைப் பொறுத்தவரை, அவர்கள் பிறந்தவுடனேயே பெரிய மனிதர்களாகிவிடுகிறார்கள். என்னோட லைஃப்ல இதுமாதிரி மேட்ச் பார்த்ததில்லை என்று கூறும் இரண்டரை வயதுப் பிள்ளைகள் பெருகிவிட்டார்கள். தமிழறிஞர் கு.ஞானசம்பந்தன் அடிக்கடி கூறும் நகைச்சுவைகளில் இதுவும் ஒன்று. உண்மையில், இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றனர். “நான் சின்னப்பிள்ளையா இருக்குறப்போ அப்படி நடந்துச்சு, இப்படி நடந்துச்சு” என்று கதை சொல்லும் குழந்தைகளில் முக்காலே சொச்சம் பேர் பத்து வயதைக்கூடத் தாண்டாதவர்கள். உடலில் ஏற்படும் மாற்றம் மட்டும்தான் பெரிய மனிதருக்கான தோற்றத்தைத் தருகிறது என்று அளவுகோல் வைத்தால் மட்டுமே, இவர்கள் தங்களைச் சிறுவர்களாகவும் சிறுமியர்களாகவும் ஒப்புக்கொள்வார்கள். இப்படிப்பட்ட காலச் சூழலில், இவர்களை ஏதுமறியாக் குழந்தைகளாகக் கருதுவது கூட, இவர்களைப் பொறுத்தவரை வன்முறைதான்.

கண்மணியும் அப்படிப்பட்ட குழந்தைகளில் ஒருவர்தான். பதின் பருவத்தின் வாயிலில் அடியெடுத்து வைத்துள்ள அவருக்குத் தான் சிறுமியா அல்லது பெரியவளா என்ற குழப்பம் இருந்தது. மனநல ஆலோசனைகள் வழங்கியபோது, இந்தச் சந்தேகத்தை அவர் வெளிப்படையாகவே முன்வைத்தார். கண்மணி என்ன செய்தாலும், “நீ ஒண்ணும் சின்னக் குழந்தையில்ல, உனக்கு ஒரு தம்பி இருக்கான்” என்ற வார்த்தையைச் சொல்லிவந்தார் தெய்வானை. அதே நேரத்தில், பெரிய மனுஷியைப் போன்று பலர் இருக்குமிடத்தில் கருத்து சொன்னபோது, அதே தெய்வானை பதறிப்போய்விட்டார். சம்பந்தப்பட்டவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றவுடன், “நீ ஒண்ணும் பெரிய மனுஷி இல்லை; இன்னும் குழந்தைதான்கறதை ஞாபகத்துல வெச்சுக்கோ” என்று கூறியிருக்கிறார். கூடவே, அறிவு உனக்குக் கொஞ்சம் கூட இல்ல என்ற வார்த்தைகளையும் துணைக்கு அழைத்திருக்கிறார். பலமுறை இந்தச் சம்பவங்கள் மாறி மாறி நடந்துள்ளன. இதனால் மிகவும் குழம்பிப்போய்விட்டார் கண்மணி. தான் எப்படிச் செயல்பட வேண்டுமென்று தனது தாயார் எதிர்பார்க்கிறார் என்பதை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

மரம் மாதிரியான மனிதர்கள்

பதின் பருவத்தில் இருக்கும் சிறுமிகளுக்குத் தங்களது உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிப் பல்வேறு சந்தேகங்கள் முளைக்கும். சக மாணவிகள் இது குறித்துத் தங்களது தாயாரிடம் பேசும்போது, தன்னால் அப்படிப் பேச முடியவில்லையே என்ற வருத்தம் கண்மணியிடம் இருந்தது. காரணம், கண்மணி என்ன சொன்னாலும் கிண்டல் செய்வது, கோபப்படுவது, எரிச்சலுறுவது என்றிருந்தார் தெய்வானை. நிலைமை கைமீறிப் போகும்போது, உணர்ச்சி மேலிடப் பேசுவது அவரது வழக்கம். இதனை நினைக்கும்போதெல்லாம் கண்மணியிடம் அயர்ச்சி பெருகியது. தனது தாய்க்கு சென்டிமெண்ட் திலகம் என்று மனதுக்குள் அவர் பெயர் வைத்திருந்தார்

தனக்கென்று யாரும் இல்லாததாலேயே, மரத்துடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார் கண்மணி. மனம்விட்டுப், பேச மரம் மாதிரியான பொறுமையான ஒரு மனிதரை எதிர்பார்த்தார். அதற்கேற்ற வகையில் யாரும் கிடைக்காததால், மரத்தையே அவர் பேச்சுத் துணையாக்கிக்கொண்டார். இதனால் அக்கம்பக்கத்தினரின் கிண்டல் பெருகி, ஒரு கட்டத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு சிறுவனை அடித்துவிட்டார் கண்மணி. இதனால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் விளக்கமளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முருகனும் தெய்வானையும் ஆளாகினர்.

சமீபத்தில் கண்மணி படிக்கும் பள்ளி நிர்வாகம், அவரது பெற்றோருக்கு அழைப்பு விடுத்தது. வரும் ஆண்டில் உங்களது மகளின் கல்வி, ஒழுக்கம் மற்றும் பள்ளிச்சூழலில் நடந்துகொள்ளும் முறைகளில் சிக்கல் இருப்பதாகக் கருதினால், உடனே அவரை பள்ளியிலிருந்து நீக்கிவிடுவோம் என்று தெய்வானையிடம் கூறியது. புகழ்பெற்ற பள்ளியில் இருந்து டிசி கொடுத்து உடனடியாக வெளியேற்றினால் என்னவாகும்? மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பதறிப்போனார் தெய்வானை. கணவனிடம் நடந்ததைத் தெரிவித்தாள்.

கறாராக இருப்பதோ, காட்டுமிராண்டித்தனமான கண்டிப்போ, கண்மணியிடம் செல்லுபடியாகாது என்று அவர்கள் இருவருக்கும் நன்கு தெரியும். பதின்பருவச் சிக்கலின் விளைவுகளில் ஒன்றாகவும் இது இருக்கலாம் என்று முருகனின் நண்பர்கள் சிலர் அறிவுரை கூறினர். அதன் பின்னரே, கண்மணிக்கு மனநல ஆலோசனை மையத்தில் சிகிச்சை தருவது என்ற முடிவை நோக்கி இருவரும் நகர்ந்தனர்.

தான் முக்கியமா அல்லது தனது தம்பி முக்கியமா என்று பெற்றோர் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதே கண்மணியின் கேள்வி. தெய்வானையின் பதில் வார்த்தைகளில் நேரடியாக வெளிப்படவில்லை. ஆனால், அவரது செய்கைகள் மகனுக்கு முக்கியத்துவம் தந்ததை அப்பட்டமாக வெளிப்படுத்தியன. இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பது போலவே முருகனின் நடவடிக்கைகள் இருந்தன. ஆனால், இருவரும் தங்களது மகளின் எதிர்காலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரே புள்ளியில் நின்றிருந்தனர்.

கண்மணியின் சிக்கல்கள்

வளரிளம் பருவத்துக்கே உரிய பிரச்சினைகளின் முதன்மையானது. சுயமதிப்பீடு குறைவாக இருப்பது. எனக்கு அறிவு இல்லை; அதிர்ஷ்டமும் திறமையும் தன்னிடம் கிடையாது; நான் ஒரு கோழை; என்னால் எல்லோரையும்விடத் திறமையாகச் செயல்பட முடியுமா என்றெல்லாம் கண்மணி மனம் குமைந்துகொண்டிருந்தார். இதனைச் சரி செய்ய, கண்மணியிடம் இருந்த நற்கூறுகளைப் பட்டியலிட்டாலே போதும். ஆனால், அவரது பெற்றோர் இதனைச் செய்யவில்லை என்பதுதான் சோகம்.

எந்த ஒரு விஷயத்திலும் அதீத மகிழ்ச்சி அல்லது சோகத்தை வெளிப்படுத்தும் வழக்கம் கண்மணியிடம் இருந்தது. உணர்வுகளின் வெளிப்பாட்டில் இருக்கும் கட்டுப்பாடற்ற தன்மை பல்வேறு சிக்கல்களைப் புதிதாக உண்டாக்கும் வல்லமை கொண்டது. இதனைச் சரிப்படுத்தக் கண்மணிக்குச் சில மனநலப் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இறுதியாக, குடும்பத்துடனும் சமூகத்துடனும் இசைந்துபோகும் குணம் கண்மணியிடம் அதிகமானது. வளரிளம் பருவத்தில் பெருகும் இந்தக் குணங்களைச் சரி செய்தாலே, அவரிடத்தில் பல்வேறு நல்மாற்றங்கள் உருவாகுமென்பது தெளிவாகத் தெரிந்தது. இவற்றை எதிர்கொள்ள முடியாமல்தான், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து விலகிச் செல்கின்றனர்.

குழந்தைகளின் புரியும் திறன்

கண்மணியின் பேச்சுகளை, செயல்பாடுகளைத் திசை திருப்பும் வகையிலேயே, வாரத்தில் ஆறு நாட்கள் அவரை டியூஷனுக்கு அனுப்பினர் தெய்வானையும் முருகனும். இதனை நன்கு உணர்ந்திருந்தார் கண்மணி. அவருக்கு, அதன் பின்னிருக்கும் உண்மையைத் தெளிவாகப் புரியும் அளவுக்குத் திறன் இருந்தது. நிறைய பெற்றோர்கள் விதவிதமான சிறப்பு வகுப்புகளுக்குத் தங்களது குழந்தைகளைத் தள்ளிவிடுவதன் பின்னணியும் இதுதான். ஏதோ ஒன்றில் குழந்தைகளைச் செலுத்தி, அவர்களது கவனத்தைத் திசை திருப்பினால் போதுமென்பதே பெற்றோர்களின் வழக்கமாக உள்ளது.

இதேபோல, செல்போன் மற்றும் டிவியின் மீதான கண்மணியின் ஈர்ப்பும் மிக முக்கியப் பிரச்சினையாக இருந்தது. மூளையில் ஏற்படும் அயர்ச்சியைப் போக்க ஏதேனும் ஒரு பொழுதுபோக்கைத் தேடித் தேடி, அதனைத் தானாக மூளை நாடும் என்பதே பொது விதி. அப்படியொரு சூழலுக்கு ஆளாகியிருந்தார் கண்மணி. அதிலிருந்து விடுபட, அவருக்கு ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

உண்மையை உணர்த்துங்கள்

பொதுவாக, சமூக வலைதளங்களைச் சீரிய முறையில் கையாள்பவர்கள், சமூக வெளியில் செயல்பட முடியாமல் தடுமாறுவார்கள். நல்ல வேளையாக, அந்த அளவுக்குச் சமூக வலைதளங்களுக்குக் கண்மணி அடிமையாகவில்லை. இவரது விஷயத்தைப் பொறுத்தவரை, வீட்டுச் சூழலும் சமூகச் சூழலும் ஒரு பதின்வயதுச் சிறுமியின் உணர்ச்சிக்கு எதிரானதாக இருந்தது. அதனைச் சரி செய்வதோடு, அது குறித்த தகவலை உணர்த்திவிட்டாலே போதும். பல்வேறு மாற்றங்கள் தானாக நிகழும்.

கண்மணியின் பெற்றோர் ஒத்துழைப்பு தர, அந்த மாற்றம் நிகழ்ந்தது. இப்போது, அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறார் கண்மணி. அவரது ஆசிரியர்கள், பாபுவின் படிப்பை, திறமையை, விளையாட்டு ஆர்வத்தை, கண்மணியோடு ஒப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அதுபற்றி கண்மணி பெருமைப்படுவதும் இல்லை; குறை கொள்வதும் இல்லை. வீட்டில் ஒரு தோழன் இருக்கிறான் என்ற நினைப்போடே, தினமும் பள்ளி சென்று வருகிறார். அதோடு, நவீன உலகின் மாற்றங்களை எந்த அளவுக்கு உள்வாங்கி வெளிப்படுத்த வேண்டுமென்பதிலும் கவனத்தோடு இருக்கிறார். தாய் மற்றும் தந்தையின் பின்னணியையும், தான் வளர்ந்துவரும் சூழலையும், அவர் நன்கு புரிந்து கொண்டுள்ளார். முக்கியமாக, சிறுமிக்கும் வளர்ந்த பெண்ணுக்குமான எல்லைக் கோட்டை நன்கு உணர்ந்துள்ளார்.

பழைமையைப் போற்றுவதோடு, நவீன உலகை எதிர்கொள்ளத் தேவையான மாற்றங்களையும் குழந்தைகளிடத்தில் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். முருகனும் தெய்வானையும் அதனைத் தற்போது நன்கு உணர்ந்துள்ளனர். மறந்தும், கண்மணியைவிட பாபுவே முதன்மையானவர் என்று எக்கணத்திலும் அவர்கள் நினைப்பதில்லை.

கண்மணியின் சிக்கல், பதின் வயதுச் சிறுமியின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; அந்த பருவத்தைக் கடக்கும் இரு பாலருக்குமான பொது உதாரணம். சமூகமும் வீட்டுச் சூழலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதில் ஏற்படும் சிறு சிறு தவறுகளையும் சரிசெய்யும் வல்லமை அக்குழந்தைகளிடத்தில் உண்டு. ஆனால், அந்த வல்லமையை வலுவற்றதாக்கும் விதமாக, நமது நடவடிக்கைகள் அமைந்திடக் கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், குழந்தைகள் எதிர்கொள்ளும் சமூக வாழ்க்கையானது பெரும்பாலும் பெற்றோரிடமிருந்தே தொடங்குகிறது.

எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்

கட்டுரையாளர்கள்:

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.

டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில். பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018