மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

படிக்காதவர் வடிவமைத்த பாடப் புத்தகம்..!

பள்ளிப் படிப்பைப் பெறாதவர், தமிழக அரசின் பாடப் புத்தகங்களை வடிவமைத்திருக்கிறார்..!

சிறு வயதில் வறுமையின் காரணமாகப் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல், பேப்பர் போடுவது, கட்டட வேலை செய்வது, ஆபீஸ் பாயாக வேலை செய்வது என இருந்தவர் இன்று பல லட்சம் மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகங்களை வடிவமைத்திருக்கிறார்.

படத்தில் இருக்கும் பாடப் புத்தகங்களின் அட்டையைப் பாருங்கள்! பார்த்தாலே எடுத்துப் படிக்கத் தோன்றுகிறதல்லவா? இதுதான் அவரது நோக்கமும்கூட! மாணவர்கள் பாடத்தைப் பார்த்து பயப்படாமல் விரும்பி எடுத்துப் படிக்கும் வகையில் அதன் வடிவமைப்பு இருக்க வேண்டும் என்று வேலை செய்திருக்கிறார்.

கதிர் ஆறுமுகம் எனும் கலைஞனின் வாழ்க்கையே பாடப் புத்தகமாக ஆக்கப்பட வேண்டும். அவ்வளவு பாடங்களால் நிறைந்துள்ளது இவரின் வாழ்க்கைக் கதை. 9ஆம் வகுப்போடு தனது பள்ளிப் படிப்புக்கு முழுக்குப்போட்டு குடும்ப வறுமை காரணமாக ஓட்டல் சப்ளையர் முதல் சேமியா கம்பெனிகள் வரை வேலை செய்துள்ளார்.

சிறு வயதில் இவருக்கு இருந்த ஓவியத் திறமைக்குத் தீனி கொடுத்தவை சைக்கிள்களும், பெயர்ப் பலகைகளும்தான். சைக்கிள்களில் பெயர் எழுதுவதும் கடைகளுக்கான பெயர்ப் பலகைகளில் ஓவியம் வரைவதுமாகத் தொடங்கியது இவரது வடிவமைப்புப் பணி. ஒரு வடிவமைப்பு நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக டீ வாங்கிக் கொடுத்துக்கொண்டு, தூரத்திலிருந்து பார்த்துப் பார்த்தே வடிவமைப்பைக் கற்றுத் தேர்ந்துள்ளார்.

இன்று சென்னையில் மிகவும் முக்கியமான வடிவமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். தமிழக அரசே அழைத்துப் பாராட்டிப் பணி கொடுக்கும் அளவுக்குப் பயணப்பட்டிருக்கிறது இவரது பெயின்ட் பிரஷ்.

தனக்கு என்ன தேவை என்பதைத் தேடித் திரிந்து தெரிந்துகொள்பவர்கள்தான் மிகப் பெரிய வேலைகளையும் சாதாரணமாகச் செய்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்குக் கல்வியைவிட அனுபவங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இவ்வாறான சாதனையாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

- நரேஷ்

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon